தேவனால் நம்மை நேற்றைவிட இன்று குறைவாகவோ அல்லது இன்றைவிட நாளை அதிகமாகவோ நேசிக்க முடியாது. அவர் அன்பு என்றும் மாறாதது. அது என்றென்று நிலைநிற்கக்கூடியது, அது தோற்றுப்போகவும் வாய்ப்பில்லை. எது நிலை நிற்கிறதோ அதுவே நம்மை நிலைநிற்கச் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. அவர் உண்மையுள்ளவராக இருப்பதால் நம்மை நிலைநிறுத்தக்கூடியவராக இருக்கிறார்.
அன்பு எல்லா நேரங்களிலும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் அது வெற்றிபெறும் அந்நாள் மட்டும் நிலைநிற்கிறது. தற்காலிக தோல்வி மற்றும் பின்னடைவுகளால் அது ஒருநாளும் ஒழிந்து போவதில்லை. அது ஒருநாளும் சலித்துக் கொள்வதில்லை. அது என்றென்று நிலை நிற்கக்கூடியதாக இருப்பதால் மாத்திரமே நம்மால் தேவன் நமக்கு நியமித்ததை செய்து முடிக்க முடிகிறது. அது நமது சுயபெலத்தால் சாத்தியமற்றது. தேவனுடைய கிருபையும், அவர் அருளும் உற்சாகமான ஆவியுமே நம்மை வெற்றி பெறக்கூடியவர்களாய் மாற்றுகிறது.
மனந்திரும்பிய மைந்தன் உவமையில் அந்த இளைய மைந்தன் தோல்வியின் அடையாளமாகவும், தந்தை என்றென்றும் நிலைநிற்கும் அன்பின் அடையாளமாகவும் இருக்கிறார். அவன் நிலையென்று நினைத்த அத்தனையும் அவனை விட்டு அகன்று போனது. அவன் திரும்பி வந்தபோது அன்பு மாத்திரமே நிலைத்து நின்றது.
கர்த்தர் நமக்குள் தமது அன்பை ஊற்றியிருக்கிறார். நமக்குள் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை அவர் அறிந்திருக்கிறபடியால்தான் தம் ஆடுகளை மேய்க்கும் கடைமையை நமக்குத் தந்திருக்கிறார். அந்தப் பணியை வெற்றிகரமாக செய்துமுடிக்கவும் அவரே நமக்கு துணையாக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/mMAeumUUm0k