குமாரனாகிய தேவன், மாம்சத்தையும் இரத்தையும் உடையவராகி, மனிதனாக வந்து நம்மைப்போல சகலவிதங்களிலும் பாடுபட்டார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவர் என்று நிரூபிக்கப்பட்டவர், நம்மைப்போல சோதிக்கப்பட்டபடியால் நமது உணர்வுகளை அறிந்து நமக்காகப் பரிதபிக்கக்கூடியவர்.
தேவனிடத்திலிருத்து நமக்கு பரீட்சை (test) வருகிறது, பிசாசிடமிருந்து நமக்கு பாவம் செய்வதற்கான தூண்டுதல் (temptation) வருகிறது. இரண்டுமே சோதனை என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் ஒருவனையும் பொல்லாங்கினால் சோதிக்கிறவர் அல்ல, பிசாசோ நம்மை பொல்லாங்கு செய்ய வைக்கவே சோதிக்கிறான்.
மனிதனுக்கு பிசாசானவன் மூன்று விதங்களில் சோதனை கொண்டு வருகிறான். அவை கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை என்பனவாகும். எது விலக்கப்பட்டதோ அதை கவர்ச்சியாகக் காட்டி நமது கண்களின் இச்சையைத் தூண்டி நம்மைக் கறைப்படுத்த முயலுவான். நியாயமான தேவைகளை அநியாயமான முறைமைகளைக் கொண்டு சாதிக்க நம்மை ஏவுவான். நேர்வழியில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டியவைகளை குறுக்குவழியில் போய் பெற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுவான்.
கர்த்தராகிய இயேசு வனாந்திரத்தில் உபவாசித்த நாட்களில் இந்த மூன்று சோதனைகளையும் கர்த்தருடைய வார்த்தையால் மேற்கொண்டார். நமக்கும் தீர்வு வார்த்தையில்தான் இருக்கிறது. அதை வாசித்துப் புரிந்துகொண்டால் ஜெயிக்கலாம். கர்த்தரே நமக்கு ஆதாரமாக இருக்கிறபடியால் அவரைச் சார்ந்துகொண்டு, நேர்வழியில் சென்று, நமக்கென்று தேவன் நியமித்ததை அவரது கைகளிலிருந்தே பெற்றுக்கொண்டு சாத்தானை வெட்கப்படுத்தி, தேவனை மகிமைப்படுத்தலாம்.
அவரும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டபடியால் நம்மை பெலப்படுத்தி, ஆலோசனை தந்து வழிநடத்த போதுமானவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/XclgIEEGkIY