நமக்கு நடக்க வேண்டிய நன்மைகள் தாமதிக்கும் போதும், முரணான காரியங்கள் நடக்கும் போதும் சந்தேகம் வந்துவிடுகிறது. சூழ்நிலைகளுக்கேற்ப மனநிலைகள் மாறுவது மனித இயல்பு. சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சந்தேகங்கள் வருகிறது, சூழ்நிலைகள் மாறியவுடன் சந்தேகமும் மறைந்துவிடுகிறது. ஆனால் கர்த்தருடைய வசனத்தைப் பெற்றுள்ள சந்ததியாகிய நாம் அப்படி நிலையற்ற மனநிலையில் ஒரு போதும் உழலக்கூடாது.
நம்முடைய தேவன் குழப்பத்துக்கு தேவனாக இராமல் மனத்தெளிவுக்கும், சமாதானத்துக்கும் தேவனாக இருக்கிறார். அவரோடு இருக்கும் உறவுதான் நமது மனநிலையைத் தீர்மானிக்கிறது. சந்தேகம் எப்போதும் இருமனத்தோடு தொடர்புடையது. சந்தேகமும் இருமனமும் சாத்தான் வேலைசெய்ய சாதகமான தளங்களாக அமைந்துவிடுகின்றன. இதை நாம் மேற்கொள்ள வேண்டுமானால் ஆவியானவருடைய சத்தத்துக்கு நாம் செவிமடுக்க வேண்டும். நமக்கு வரும் சந்தேகத்தை எடுத்து கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படுத்தி நாம் அதை ஜெயிக்க வேண்டும்.
ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சாவி இருப்பதுபோல ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதைத் தீர்க்க ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. அந்த சரியான வாக்குத்தத்தத்தை, சரியான நேரத்தில் வேதத்திலிருந்து எடுத்து நமக்கு போதிப்பதன்மூலம் ஆவியானவர் அந்த சந்தேகத்தை ஜெயிக்க நமக்கு உதவுகிறார். அந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து நாம் அதை வாயில் அறிக்கையிடும்போது தேவன் தம்முடைய வல்லமையை விளங்கச்செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/41ldZ7ZA2d0