பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம்

Home » பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம்

பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம்

கிறிஸ்துவை பரீட்சிக்கப்பட்ட அஸ்திபாரம் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். (ஏசாயா 28:16)அவர் பரீட்சிக்கப்பட்டவர், சோதிக்கப்பட்டவர் நிரூபிக்கப்பட்டவர். அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு நமக்கும் கர்த்தருக்கும் இடையே மத்தியஸ்தராக நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிறவராகவும், தேவனுடைய கண்ணோட்டத்தை நமக்குத் தெரிவிக்கிறவராகவும் இருக்கிறார்.

எனவே நம்முடைய வாழ்விலும் சோதனைகளுமுண்டு, பரீட்சைகளுமுண்டு. சோதனைகள் பிசாசிடமிருந்தும், பரீட்சைகள் தேவனிடத்திலிருந்தும் வருகின்றன. ஆபிரகாமை தேவன் பரீட்சித்தார், அந்த பரீட்சையில் வெற்றியடையவும் அவருக்கு உதவி செய்தார். இருக்கும் இடத்தில் இருந்து இருக்க வேண்டிய இடத்துக்கு நம்மை உயர்த்தவே நமக்கு பரீட்சை வருகிறது. பரீட்சையாக இருந்தாலும் சோதனையாக இருந்தாலும் நமக்கு உதவி செய்ய தேவன் வல்லவராக இருக்கிறார். அவர் ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்க முடியும்.

சில நேரங்களில் சோதனைகளோடும், பரீட்சைகளோடும் வேதனையும் சேர்ந்தே வருகிறது. கர்த்தராகிய இயேசு சோதிக்கப்பட்டதோடு பாடுகளும் பட்டிருக்கிறார் என்று எபிரெயர் 2:18 கூறுகிறது. ஆனாலும் அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்து, நியாயமாய் தீர்ப்பு செய்கிறவரிடத்தில் தம்மை ஒப்புவித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

கிறிஸ்துவும் பாடுபட்டு நான் அவருடைய அடிச்சுவடுகளைத் தொடரும்படி நமக்காக ஒரு மாதிரியை வைத்திருக்கிறார். எனவே சோதனைகளும், பரீட்சைகளும் வரும்போது நாமும் கர்த்தராகிய இயேசுவைப்போலவே, “பிதாவே உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக” என்று ஜெபிக்க வேண்டும். மனுஷருக்கு நேரிடுகிற சோதனைகளேயல்லாமல் வேறொன்றும் நமக்கு நேரிடுவதில்லை. எந்த சோதனை வந்தாலும் நமது கவனம் தேவன்மீதே இருக்க வேண்டும். ஏனெனில் அவர் நமக்கு உதவி செய்ய உண்மையுள்ளவராக இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/aOFb7gqTvg8

>