பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமை என்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சபைக்கு எழுதுகிறார். (1 பேதுரு 4:12,13)
நாம் கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாக இருப்பதால் பாடுகளை சரியாகக் கையாளும் போது, கிருபையிலும் இரக்கத்திலும் ஐசுவரியமுள்ளவராகிய கிறிஸ்து நம்மை விசுவாசத்தில் ஐசுவரியம் உள்ளவராக மாற்றுகிறார். அதன் விளைவாக நாம் அவருடைய பாடுகளில் மாத்திரம் அல்ல, அவருடைய திவ்விய சுபாவத்திலும் பங்குள்ளவர்களாக மாறுகிறோம்.
அவர் தேவனுடைய குமாரனாக இருந்துப் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதாக எபிரேயர் 5:8ல் வாசிக்கிறோம். குமாரனாய் இருந்தும் அவருக்குப் பாடுகள் வருமானால் குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிற நமக்கும் பாடுகள் வருவது திண்ணம். அந்தப் பாடுகளின் மத்தியிலும் நாங்கள் சுயசித்தம் செய்கிறவர்களல்ல, தேவசித்தம் செய்கிறவர்கள் என்று அர்ப்பணிப்போமானால், நமக்கு சூழ்நிலையின் மேல் ஆளுகையை கர்த்தர் வைத்திருக்கிறார். அப்பொழுது அவர் தாம் பட்ட பாடுகளின் மத்தியிலும் எப்படி கீழ்ப்படிந்தவராகவே இருந்தாரோ அப்படியே நாமும் இருக்க முடியும்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/6RLTYLviA5U