ஆசீர்வாதம் என்பது ஒரு மனிதனை உயர்த்தும் சக்தி. அதற்கு நேர் எதிரான சாபம் என்பது ஒரு மனிதனை தாழ்வில் அமிழ்த்தி வைக்கும் சக்தி. ஆதாமின் பாவத்தின் விளைவாகத்தான் சாபம் என்பது மனித வாழ்வில் புகுந்தது. தேவ வார்த்தையை நிராகரித்ததே ஆதாம் செய்த பாவம். தேவனுடைய வார்த்தையை நிராகரித்தல் என்பதன் இன்னொரு பக்கம் சாத்தானுடைய வார்த்தையை அங்கீகரித்தல் என்பதாகும்.
தேவனுடைய வார்த்தையின் முழுமைக்கும் ஒப்புக்கொடுப்பதே சாபங்களை உடைக்கும். நமது விருப்பமான வசனங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, சவாலானவைகளைப் புறக்கணிப்பது நமக்கு நலம் பயக்காது. வேதம் எப்பிராயீமைக் குறித்து அவன் ஒரு திருப்பிப்போடாத அப்பம் என்கிறது. அதை நமது வழக்கு மொழியில் சொல்லப்போனால் “அரைவேக்காடு” என்று அர்த்தம். தேவனுடைய வசனங்கள் அத்தனையும் நம்மை நன்மைக்கே நடத்துகின்றன. அவருடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைப்போம்.
கிறிஸ்து நமக்காக சாபமாகி நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்டார். சிலுவையில் நமது கீழ்ப்படியாமையின் விளைவையும், அவரது கீழ்ப்படிதலின் விளைவையும் நாம் காணமுடியும். ஆதாமின் தீமை இன்றைக்கும் வேலை செய்து சாபங்களைக் கொண்டுவருமானால், கிறிஸ்துவின் நன்மை இன்றைக்கும் வேலை செய்து அந்த சாபங்களை உடைக்கும். பரிசுத்த ஆவியானவர் அதை விளங்கிக்கொள்ளவும், அனுபவமாக்கவும் நமக்கு உதவி செய்கிறார்.
கிறிஸ்து சாபமானார், நாம் சாபத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜென்ம சுபாவத்தின்படி நாம் கீழ்ப்படியவே முடியாது என்ற நிலை இருக்கும்போது அதற்கான தண்டனைகளை கிறிஸ்து தன்மீது ஏற்றுக்கொண்டு, கீழ்படிதலுக்கான ஆசீர்வாதங்களை நமக்குத் தருகிறார். நமக்குள் இருக்கும் ஆவியானவர் நாம் கீழ்ப்படிவதற்கான பெலனை நமக்குத் தந்து, நம்மை சாபத்திலிருந்து ஆசீர்வாதங்களுக்கு நேராக நடத்துகிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/577FVQmFUE4