கர்த்தராகிய தேவன் நல்ல மேய்ப்பராக இருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே தமது தீர்மானத்தின்படி நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த உலகில் கோடானகோடி மக்கள் இருக்கும்போது அவர் நம்மைத் தெரிந்துகொண்டது அவருடைய சுத்த கிருபையாக இருக்கிறது.
இந்த உலகம் பொல்லாங்கானதாக இருக்கிறபடியால் இந்த உலகத்தில் நமக்கு உபத்திரவங்கள் வருவது இயல்புதான், ஆனாலும் நம்மைக் குறித்த தேவனுடைய தீர்மானம் நன்மைக்கேதுவானதாக இருக்கிற படியால் நமக்கு வரும் தீமைகள் நிச்சயம் நன்மைகளாகவே மாறுகின்றன. அவர் நம்மை தமக்கு சொந்த ஜனங்களாகத் தெரிந்துகொண்டபடியால் நமக்குக் கிடைத்த சிலாக்கியம் இது.
நாம் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரே நமக்கு சாட்சியாக இருக்கிறார். நம்மை எடுத்துக்கொள்ளப்போகிறவரே நமக்குள் இருக்கிற படியால் அவருடைய வருகையில் நாம் எடுத்துக்கொள்ளப்படப்போவது அதிக நிச்சயமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு நம்மைச் சேர்த்துக்கொள்ளவே மறுபடியும் இந்த பூமிக்கு திரும்ப வருகிறார். ஆகவே இம்மைக்கும் மாத்திரமல்ல மறுமைக்கும் அவருடைய உறவினால் ஒரு உரிமை இருக்கிறது.
அந்த உறவின் விளைவாகத்தான் அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் எத்தகைய பயத்தோடு இந்த உலகத்தில் இருந்தாலும் நம்மை அழைத்து, வாரி அணைத்து, நமது பயங்களை நீக்கக்கூடிய நல்ல பிதாவாக நம்முடைய தேவன் நமக்கு இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ai_c71VAanw