அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் கிறிஸ்துவுக்குமான உறவு “ஆண்டவரே நீர் யார்?” என்பதில் துவங்கி “நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்திருக்கிறேன்” என்று முடிகிற உன்னதமான உறவாக இருந்தது. இன்று அநேகர் கடவுளை அறிய அநேக பிரயத்தனங்களைச் செய்கிறார்கள், தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். ஆனால் தேவனோ தம்மை நமக்கு வெளிப்படுத்த எப்பொழுதும் ஆவலுள்ளவராகவே இருக்கிறார்.
மத்தேயு 11:25 கூறுகிறபடி அவர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் தம்மை மறைத்து பாலகராகிய நமக்கு தம்மை வெளிப்படுத்துகிறவர். எனவே அவரை நாம் அறிந்து கொள்வது அவரது அனுக்கிரகமன்றி சாத்தியமில்லை.
கிறிஸ்து ஒரு மனிதனுக்கு தம்மை எப்படி வெளிப்படுத்துகிறார்? பிதாவும் கிறிஸ்துவுமாக வந்து அந்த மனிதனோடு வாசம்பண்ணுகிறார்கள். (யோவான் 14:23) அவர்கள் கூடவே வாசம்பண்ணுவதன் காரணம் நமக்கு தம்மை வெளிப்படுத்துவதுதான். பிதாவானவர் தம்மை அறிந்திருக்கிறது போலவும், தாம் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், கிறிஸ்துவானவர் நம்மை அறிந்துகொள்ளவும், நம்மால் அறிந்துகொள்ளப்படவும் விரும்புகிறார்.
நம் வாயில் சொல் பிறவாததற்கு முன்னமே அதை அறிந்திருக்கும் அளவுக்கு கர்த்தர் நம்மை அறிந்து வைத்திருக்கிறார். நாம் அவரை அறிந்துகொள்ளவேண்டும் எனவும் விரும்புகிறார். இந்த அளவுக்கு அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்தச் சித்தமாக இருக்கும்பொழுது நம்முடைய பிரதிமொழி என்னவாக இருக்க வேண்டுமென்றால் அது நாம் அவரை அறிந்துகொள்ளச் செய்யும் பிரயாசமாக இருக்க வேண்டும். அவருடைய பிரியமும் நம்முடைய பிரயாசமும் சேரும்பொழுது ஆசீர்வாதங்கள் நம் வாழ்வின் அனுபவங்களாக மாறுகின்றன.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/YT7