நம்முடைய இருதயம் நிலமானால் அதில் விதைக்கப்படும் தேவ வார்த்தை விதையாகும். விளைச்சல் விரும்பத்தக்கதாக இருக்கும்பொழுது நிலத்தின் குணமும், விதையின் தரமும் வெளிப்படுகிறது. இப்படித்தான் தேவன் நம்மிலும் நாம் அவரிலும் மகிமைப்படுகிறோம்.
கர்த்தர் மகிமையால் நிறைந்தவராக இருந்தாலும் அவர் நம்மூலம் மகிமைப்பட விரும்புகிறார். அதுதான் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்! நாம் கனிகொடுக்கும்பொழுதுதான் தேவன் மகிமைப்படுகிறார். அப்படிப்பட்ட கனிநிறைந்த வாழ்வு வேண்டுமென்றால் நமக்கு விதை நிறைந்த வாழ்க்கை வேண்டும். அதாவது நாம் வசனத்தினால் நிறையப்பெற்றிருக்க வேண்டும்.
தேவமகிமைக்கு நேராக நம்மைப் பக்குவப்படுத்தும் இன்னொரு காரியம் தேவனோடும், சக விசுவாசிகளோடும் கொண்டிருக்கும் ஐக்கியமாகும். இதற்கு ஜெபமும், ஸ்தல சபையும் நமக்கு உதவுகின்றன. அது மட்டுமன்றி நாம் பெற்ற வரங்களை ஆவியானவரின் ஒத்தாசையோடு சிறப்பாக பயன்படுத்துவதன் மூலமும் அவர் நம்மில் மகிமைப்படுகிறார்.
நாம் அவரிலும் அவர் நம்மிலும் மகிமைப்படும் பொருட்டாக எதற்காக நம்மை அழைத்தாரோ அதை நாம் செய்து முடிப்பதற்கு அவரே நமக்கு பெலனாக இருக்கிறார். அதற்கு நாம் அவரை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். பெற்ற அபிஷேகத்தைப் பயன்படுத்த வேண்டும், ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு மூத்தவர்களுக்கு கீழ்ப்படிந்து அவர்களால் உருவாக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நம்மைவிட ஆவிக்குரிய அனுபவத்தில் இளையவர்களை நாம் உருவாக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கை மூலம் நம்மில் தேவனும், நாம் அவரிலும் மகிமைப்படுகிறோம்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ziBw5cfodzk