நமது அன்பானது அறிவிலும் உணர்விலும் அதிகதிகமாகப் பெருக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் உணர்வில் பெருகும் போது உணர்ச்சிகளால் ஆளுகை செய்யப்படாதிருப்போம். உணர்ச்சிகள் நமக்கு தேவன் கொடுத்த ஈவுகள்தான் ஆனாலும் மனிதன் பாவத்தினால் கறைபட்டவனாக இருப்பதால் தேவன் நல்லதைக் கொடுத்தாலும் அதை எடுத்து கெட்ட காரியங்களுக்காக செயல்படுத்தக் கூடிய அபாயத்தில் இருக்கிறான்.
கோபம் என்பது ஒரு உணர்ச்சி ஆகும், தேவன் கோபப்பட்டார் என்று வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். நாம் அவருடைய சாயலாக இருப்பதால் நாமும் கோபம் கொள்ளலாம் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது, நாம் கோபம் கொள்வது பிரச்சனையில்லை. ஆனால் எந்த விஷயத்தைக் குறித்து கோபம் கொள்கிறோமோ அந்த விஷயத்தில் சுயத்தை சார்ந்து அதைக் கையாளுவதை தவிர்க்கவேண்டும்.
தேவன் அன்பாகவே இருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறது . அன்பானது கோபம் கொள்ளும்போது அந்த கோபமும் நீதியாகவே முடிகிறது. இதற்கு உதாரணமாக மாற்கு 3:1-5 வசனங்களைக் கூறலாம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மதவாதிகளின் மனக்கடினத்தைப் பார்த்து கோபப்பட்டு ஒரு வியாதிக்காரனை சுகமாக்கினார் என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலர் 16:17,18 வசனங்களில் பவுல் கோபப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்மீது தன் கோபத்தைக் கொட்டாமல், அந்த நபரைப் பிடித்திருந்த ஒரு அசுத்த ஆவியைத் துரத்தினார் என்று வாசிக்க முடிகிறது. தேவன் பவுலுக்கு உத்தம நிதானிப்பை அருளியிருந்தபடியால் பிரச்சனையைத்தான் குறிவைக்க வேண்டுமே தவிர நபரையல்ல என்று அவர் அறிந்து வைத்திருந்தார்.
அன்பு பொறுமையுள்ளதாக இருப்பதால் அது அவ்வளவு சீக்கிரம் சினமடையாது, அப்படியே சினமடைந்தாலும் அது நீதியாகத்தான் கிரியை செய்யும். அன்புக்கென்று ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, அதன் கண்ணோட்டம் சரியானதாக இருக்கிறபடியால் அது மன்னிக்கத்தான் செய்யுமே தவிர யாரையும் காயப்படுத்தாது. அன்புக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது, அது கோபத்தை தூண்டும் சூழ்நிலைகள் மூலம் தேவன் நமக்கு எதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என்று ஆராயுமே தவிர கோபத்துக்கு அது தன்னை பலியாக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டிருக்கிறபடியால் வாக்குத்தத்ததை மீறி எதுவும் நடக்காது என்பதில் அது உறுதியாக இருப்பதால் அது சினமடைவதற்கு வாய்ப்பேயில்லை.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/mlHUYuZZKk0