வெளியில் இருக்கும் சூழல்கள் நமக்கு எதிராக இருக்கும்பொழுது, நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழத்தக்க சூழல் இல்லாதிருக்கும்போது. நாம் அவைகளையே பார்த்துக்கொண்டிருப்போமானால் சோர்ந்துபோவோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவன் நமது உள்ளான மனிதனில் மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. நாம் எதிர்மறையான சூழல்களை நம்முடைய கண்கொண்டு காணாமல், கர்த்தர் அவைகளைப் பார்க்கும் கோணத்தில் பார்ப்போமானால் அவைகள் அதிசீக்கிரத்தில் நீங்கப்போகும் இலேசான உபத்திரவங்களே!
எதிர்மறையான சூழல்களில் சோர்ந்துபோவது மனித இயல்பு. அதைக் கர்த்தரும் நன்கு அறிந்திருக்கிறார். எனவேதான் முதலாவதாக அவர் நமது இருதயத்தில் கிரியை செய்கிறார். நமது ஆத்துமாவைத் தேற்றுகிறார், உள்ளான மனுஷனில் கிரியை செய்கிறார். அந்தக் கிரியையானது நமது சிந்தனையிலும், உணர்ச்சியிலும், தீர்மானங்களிலும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றத்தை நமக்கு நாமே செய்துகொள்ள முடியாது, தேவகிருபை மாத்திரமே இதைச் செய்ய முடியும்.
யோசேப்பு கர்த்தருடைய வசனத்தினால் புடமிடப்பட்டதுபோல கர்த்தர் நம்மையும் தமது வசனத்தால் புடமிடுகிறார். அந்தப் புடமிடுதலின் விளைவாக நம்மை விட்டு நீங்கவேண்டிய கசடுகள் நீங்குகின்றன, அதன் பின்னர் நமது வாழ்வு சீரமைக்கப்படுகிறது, அதற்குப் பின்னர் ஒரு ஆசீர்வாதமான ஆளுகையை நம்முடைய வாழ்வில் நம்மால் காணமுடியும். புடமிடுதலின் பாதை கடினமானதுதான் ஆனால் அதன்மூலம் ஆவிக்குரிய பெலன், ஆவிக்குரிய முதிர்ச்சி, உள்ளான பெலன் ஆகியவை நமக்குள் பெருகுகின்றன. எனவே நாம் தேவன் நம்மை பக்குவப்படுத்தும் வேளையில் சோர்ந்துபோகவேண்டிய அவசியமில்லை. அந்த சோதனையின் பாதைகளுக்குப் பின் நாம் பொன்னாக விளங்கப்போவது உறுதி!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/MPLlsGyw17A