நமக்கு வரும் பிரச்சனைகளை நாம் கையாளும் விதம் நம்மை பக்தி விருத்திக்கு நேராகவோ அல்லது விரக்திக்கு நேராகவோ வழிநடத்த முடியும். வேதாகமப் புருஷர்களில் பலர் தங்களுக்கு வந்த பாடுகளை கையாண்ட விதத்தின் மூலம் இன்னும் தேவனை நெருங்கிக் கிட்டிச் சேர்ந்தார்கள்.
உதாரணத்துக்கு அப்போஸ்தலனாகியப் பவுல் தன்னை வருத்தும் ஒரு முள் நீங்கும்படியாக தாம் தேவனிடத்தில் மூன்றுதரம் வேண்டிக்கொண்டதாகவும், அதற்கு தேவன் “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொன்னதாகவும், அதன் நிமித்தம் கிறிஸ்துவின் வல்லமை தன்மேல் தங்கும்படி, தனது பலவீனங்களைக்குறித்து தான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவதாகவும் 2 கொரிந்தியர் 12:7-9 வசனங்களில் கூறுகிறார். தான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அவர் அறிந்திருந்தபடியால் அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது.
நம்முடைய பாடுகளின் மத்தியில்தான் தேவன் நம்மோடு எவ்வளவு அந்நியோனியமாக இணைந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பாடுகள் இல்லாமல் அவரோடு உள்ள நெருக்கமான அண்மையை நாம் உணரமுடியாது. நம்மை பெலப்படுத்துகிற தேவனாக அவர் நம்மோடுகூட இருக்கிறபடியால் நாம் பெலவீனராக இருக்கும்பொழுதே பெலவான்களாக உணரமுடியும்.
இதை எப்படி நடைமுறை வாழ்வில் அனுபவிக்க முடியும்? அவரது கிருபை மீது உள்ள விசுவாசத்தினால் மட்டுமே அது சாத்தியமாகிறது. அவருடைய கிருபையை நாம் விசுவாசிக்கும்பொழுது நமது இருதயம் ஸ்திரப்படும்பொழுது, அதன் மூலம்தான் நம்மால் சகிக்கவும் முடியும், சாதிக்கவும் முடியும். இரண்டுக்குமே பெலனை அவர்தான் தருகிறார். ஆகவே நமது இருதயம் அவரது கிருபையைச் சார்ந்துகொள்வதாக! அவரே நமக்கு பெலனாக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/lC3WGPm8r1s