உறவு: உணர்திறன்

Home » உறவு: உணர்திறன்

உறவு: உணர்திறன்

ஒரு மனிதனுக்கு புத்தியானது அந்தகாரப்படுமானால் அவனது மனசாட்சியும் அந்தகாரப்படுகிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளின் மனசாட்சியோ கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் செத்த கிரியைகளற கழுவி சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதையும், தாங்கள் இந்த உலகத்தாரிடமிருந்து மாறுபட்டவர்கள் என்பதையும் தங்கள் இருதயத்தில் அறிந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியை அவர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கிறார்கள்.

தேவசித்தத்தை செய்ய விருப்பமாய் இருக்கிறவர்களுக்கு எது சரி எது தவறு என்று தேவன் மனசாட்சியின் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறார். ஆகவேதான் மனசாட்சி செத்த கிரியைகளற கழுவப்படுவது அவசியம்.

இந்த மாற்றமானது ஒரே நாளில் திடீரென ஏற்படுவதில்லை. கர்த்தராகிய இயேசு ஒரு பார்வையற்ற மனிதனின் கண்ணைத் திறந்தபோது, முதலில் அவன் மங்கலாக நடக்கிற மனிதர்களை மரங்களைப்போல கண்டான். பின்னர் அவனது பார்வை தெளிவாக மாறியது. அதுபோலவே தேவன் படிப்படியாக நமக்கு சத்தியத்தைப் புரியவைத்து கண்களைத் தெளிவிக்கிறார்.

கர்த்தருடைய தாசனாகிய தாவீது அப்படிப்பட்ட உணர்திறன் மிக்க மனிதராக இருந்தார். ஆனாலும் அவருடைய வாழ்விலும் சில முறைகள் சறுக்கல்களைச் சந்தித்தார். தான் செய்தது சரிதான் என சாதித்தார். பின்பு கர்த்தர் அவருக்கு உணர்த்திய பின்பு தன்னை ஒப்புக்கொடுத்து, தான் செய்தது தவறென ஒத்துக்கொண்டு மனந்திரும்பினார். நம்முடைய வாழ்விலும்கூட தேவன் நம்மை அதேவிதமாக நமக்கு கற்றுக்கொடுத்து நம்மையும் உணர்திறன் உள்ளவர்களாக மாற்ற தேவன் வல்லவராக இருக்கிறார்.

நம்முடைய ஆவிக்குரிய கண் திறக்கப்பட்டு, மனசாட்சியில் ஆண்டவர் கிரியை செய்யும்பொழுது நாம் சராசரி மனிதராக நடந்துகொள்ளாமல், தேவ மனிதராக நடந்துகொள்ள முடியும். அதற்கான பெலனை கர்த்தர் நமக்கு அருளுவதோடு மட்டும் நில்லாமல், அதற்கான வெகுமதியையும் நமக்குத் தந்து நம்மை உயர்த்த அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

<செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Fkr9N1kDk2A

>