அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான் 17:19 இல் சொல்லுகிறார். கிறிஸ்து ஏற்கனவே எப்போதும் பரிசுத்தராகத்தானே இருக்கிறார்? அவர் தன்னத்தான் பரிசுத்தமாக்குவதாகச் சொல்வதின் பொருள் என்ன? முதலாவதாக அவர் நம்மைப் பரிசுத்தமாக்கும்படி தன்னைத்தானே பழுதற்ற ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார் என்று எபிரேயர் 9:14 சொல்லுகிறது. இரண்டாவதாக அவருடைய சிந்தையை நாமும் தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர் நமக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டும்படி தம்மைத்தாமே பரிசுத்தமாக்கினார்.
அதாவது அர்பணம் என்பது தாழ்மையைத் தரித்துக் கொள்வதாகும். உண்மையான தாழ்மை என்பது தேவநோக்கத்துக்குக் கீழ்ப்படிவதில் இருக்கிறது. கர்த்தராகிய கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் என்று பிலிப்பியர் 2:8 கூறுகிறது. அவருடைய விருப்பமெல்லாம் தேவநோக்கத்தை நிறைவேற்றுவதிலேயே இருந்தது. தேவநோக்கங்களுக்காக தன்னை அர்ப்பணித்ததன் மூலமாக நாம் எப்படி அர்ப்பணிப்போடு வாழ வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியை வைத்துப்போனார். அப்படிப்பட்ட நோக்கம் நிறைந்த மனப்பக்குவம் கிறிஸ்துவுக்குள் இருந்ததுபோல நமக்குள்ளும் இருக்க வேண்டும் என்று பிதா விரும்புகிறார்.
எப்போது இப்படிப்பட்ட வாழ்க்கை சாத்தியமில்லையென்றால், நாம் அடுத்தவர்களின் கண்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும்வரை, அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று அதிலேயே நமது கவனம் இருக்கும்வரை பிதாவின் நோக்கத்துக்காக நம்மால் வாழமுடியாது. நாம் மனிதரை திருப்திப்படுத்த வரவில்லை. நாம் தேவநோக்கத்தை நிறைவேற்றவே இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். அதை உணர்ந்துகொண்டால் அர்பணம் நமக்குத் தானாக வரும்.
அர்பணம் செய்யபப்ட்ட வாழ்க்கை மூலமாக தேவ மகிமை வெளிப்படுகிறது. ஆனால் அந்த மகிமை வெளிப்படும் விதம் என்பது நாம் நினைப்பதுபோல வெற்றிகளும், மகிழ்ச்சிகளும், உயர்வுகளும் நிறைந்ததாக இருக்கவேண்டிய அவசியமில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அர்ப்பணமானது அவரை கடுமையான பாடுகளுக்குள்ளாகக் கொண்டுபோனது. ஆயினும் இறுதியில் தேவமகிமை வெள்ளமென வெளிப்பட்டதை நாம் காண்கிறோம். அர்ப்பணம் செய்யும்போது நாம் விரும்பத்தக்க விதத்தில் காரியங்கள் நடக்கவேண்டும் என்பதில்லை. இதற்கும் நமக்கு இயேசுவே உதாரணமாக இருக்கிறார். என்ன நடந்தாலும் அர்ப்பணித்தவனின் வாழ்வில் தேவமகிமை வெளிப்படும் என்பது திண்ணம். கர்த்தர்தாமே நமக்கு அப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பின் இருதயத்தைத் தருவாராக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/_zRBLFcwK2M