ஒரு மனிதனுடைய மனம் எப்படியிருக்கிறதோ அப்படியே அவனது வாழ்க்கையும் இருக்கும். மனம் என்பது ஆத்துமாவைக் குறிக்கும் ஒரு வார்த்தையாகும். மனித மனம் அல்லது ஆத்துமாவானது சிந்தனை, சித்தம், உணர்ச்சி என்கிற மூன்று பகுதிகளால் ஆனது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் அவனது ஆள்தத்துவத்தில் மற்ற எல்லாம் பாதிக்கப்படும். எனவே அந்த மனிதன் புதுப்பிக்கப்பட வேண்டுமானால் முதலாவது அவனது ஆத்துமா புதுப்பிக்கப்ப்ட வேண்டும். நமது கர்த்தராகிய தேவன் ஒரு மனிதனுடைய சிந்தனை, சித்தம் உணர்ச்சி ஆகியவற்றில் ஒரு தெய்வீக மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் அந்த ஒட்டுமொத்த மனிதனையும் அழகாகக் கட்டியெழுப்புகிறார்.
ஒரு மனிதனுக்குள் சிந்தையில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்கள் அவனுக்கு தவறான உணர்ச்சிகளைக் கொடுக்கிறது. அந்த தவறான உணர்ச்சிகள் அவனை தவறான தீர்மானங்களுக்கு நேராக வழிநடத்துகிறது. அந்த தவறான தீர்மானங்கள் அவனை தவறான திசைக்கு நேராகத் திருப்புகிறது. அந்த தவறான திசையில் அவன் செய்யும் பயணம் அவனை போகக்கூடாத இடங்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. ஆக, சிந்தனையைச் சீர்படுத்தாமல் வாழ்க்கையில் சிறப்பு ஒருபொழுதும் வராது. ஒரு மனிதனின் சிந்தனையை சீர்படுத்துவது ஒரு நல்ல கட்டிடத்தை எழுப்ப சிறப்பான அஸ்திபாரத்தை அமைப்பது போன்றதாகும்.
கர்த்தராகிய இயேசு சொன்ன மனந்திரும்பிய மைந்தன் உவமையில் (லூக்கா 15:11-32) வரும் இளைய மைந்தன் தனது புத்தி கெட்டபொழுது போகக்கூடாத இடங்களுக்குப் போய் சீரழிந்தான், புத்தி தெளிந்தபொழுது வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து சுகித்திருந்தான். கெட்டிருந்த அவனது புத்தியை தெளிவித்தது எது? அதுதான் தேவனுடைய வார்த்தை. அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும் என்று நீதிமொழிகள் 2:6 சொல்லுகிறது.
ஒரு மனிதனுடைய ஆத்துமா உயிர்ப்பிக்கப்படுவதே அவனது புத்தி தெளிதலாகும். ஒருவனுடைய புத்தி தெளிந்ததை எப்படி நாம் கண்டுகொள்வது. அந்த இளைய மகன் தனது புத்தி தெளிந்தபோது தனது தந்தையிடம் போய் சேர்ந்தான். அதேபோல பாபிலோனியப் பேரரசனாகிய நேபுகாத்நேச்சார் தான் புத்தியிழந்தபோது ஒரு காட்டுமிருகத்தைப் போல நடந்துகொண்டான், புத்தி தெளிந்தபோதோ அவன் தனது சிருஷ்ட்டிகராகிய தேவனிடத்தில் திரும்பி அவரை மகிமைப்படுத்தினான் என்பதை தானியேல் 4 ஆம் அதிகாரத்தில் நாம் காணமுடியும்.
ஒரு மனிதனது ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதன் அடையாளம் அவன் நிலையற்ற இந்த உலககாரியங்களை மகிமைப்படுத்தாமல் கர்த்தரையே மகிமைப்படுத்தத் துவங்குவான். அந்த மாற்றத்தை அந்த மனிதனிடத்தில் உருவாக்குவது தேவனுடைய வார்த்தையே ஆகும். எனவேதான் சங்கீதக்காரன் உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன் (சங்கீதம் 119:104) என்று பாடுகிறான்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்று சங்கீதம் 23:3 சொல்லுகிறது. ஆம், நமது கர்த்தராகிய தேவன் தமது வசனத்தின்படி நமது ஆத்துமாவுக்கு புத்துயிர் தந்து, நம்மை உணர்வுள்ளவர்களாக்கி தேவனுடைய நோக்கங்களைச் செய்ய நம்மை ஆயத்தப்படுத்துகிறவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/TpAwCrAl3G4