ஆறுதல்: கர்த்தருக்கு பயப்படுகிற பயம்

Home » ஆறுதல்: கர்த்தருக்கு பயப்படுகிற பயம்

ஆறுதல்: கர்த்தருக்கு பயப்படுகிற பயம்

பொதுவாக பயம் என்கிற வார்த்தை ஒரு எதிர்மறை உணர்வைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. ஆனால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்று வேதம் சொல்லுவது அந்த எதிர்மறை உணர்வைக் குறிக்கும் வார்த்தை அல்ல. கர்த்தர்மேல் வைத்திருக்கும் மரியாதை, அவர்மீது பொங்கி வழியும் அன்பு, அதன் விளைவாக நாம் அவரை மட்டுமே சேவிப்பதையும், ஆராதிப்பதையும் குறிக்கிறது. கர்த்தருக்கு பயப்படும் பயமானது அவருடைய வார்த்தைக்கு நாம் செய்யும் சரியான பிரதிமொழியாக இருக்கிறது.

இவ்வளவாய் நம்மில் அன்புகூர்ந்தார் என்பதற்கு அடையாளமாக தன் கரத்தை விரித்து சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்த கர்த்தராகிய இயேசுவை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். அப்படிப்பட்ட அவருடைய அன்பினாலும் கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கபட்ட நாம் அன்பினால் கிரியை செய்யும் விசுவாசத்தைக் கொண்டு அவரைச் சேவிப்பதே பரிபூரணமான, ஆசீர்வாதமான, அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பதை எதிர்மறை உணர்வாகிய பயத்துடன் தொடர்புபடுத்தியே சிலர் பார்த்துப் பழகிவிட்டதால் அந்த சிந்தனைகளைக் களைந்துபோட்டு, சரியான தேவபயம் என்றால் என்ன என்பதை உணர்த்துவது இந்தச் செய்தியின் நோக்கமாக இருக்கிறது. எதிர்மறை உணர்வாகிய பயத்தோடு அவரைச் சேவிப்பது இன்பகரமானதாக இருக்காது. அன்பினால் தேவனைச் சேவிப்பதுதான் இன்பகரமான அனுபவமாகும்.

உபாகமம் 17:14-20 வசனங்கள் இஸ்ரவேலின் இராஜாக்களுக்கு தேவன் கொடுத்த ஆலோசனையாக இருக்கிறது. அந்த ராஜாக்களின் இருதயம் பின்வாங்கிப் போகாதபடிக்கும் அவர்களுடைய இருதயம் மேட்டிமை கொள்ளாதபடிக்கும் அவர்கள் கர்த்தருக்கு பயந்திருத்தலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கர்த்தருக்கு பயந்திருத்தலைக் கற்றுக்கொள்ள அவர்கள் வேதத்தை நாடவேண்டும் என்றும் அந்த வேதபகுதி அறிவுறுத்துகிறது. அப்படிச் செய்யும்போது அவர்கள் ராஜ்ஜியம் நிலைத்திருப்பதுமட்டுமல்லாமல், அவர்களது சந்ததியும் பூரணமாக ஆசீர்வதிக்கப்படும் என்றும் அந்த வேதபகுதி சொல்லுகிறது.

ஆம், இது நமக்கும் பொருந்தும். நாமும் கர்த்தருக்கு பயந்திருத்தலைக் கற்றுக்கொள்ள அவரது வசனத்தையே நாட வேண்டும். அவரது வசனம் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அதன்விளைவாக நமக்கு அவர்மேல் இருக்கும் அன்பும், மதிப்பும் பலமடங்கு அதிகமாகி நாமும் தேவனுக்கு பயப்படுகிற பிள்ளைகளாக இந்த பூமியில் நிலைத்து ஆசீர்வாதத்துடன் வாழமுடியும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/cqgqnNuKnHs

>