இளைப்பாறுதல்: தேவனை நோக்கிக் காத்திரு

Home » இளைப்பாறுதல்: தேவனை நோக்கிக் காத்திரு

இளைப்பாறுதல்: தேவனை நோக்கிக் காத்திரு

ஒரு கிறிஸ்தவன் தனக்குத் தானே என்ன சொல்லிக் கொள்ளுகிறானோ அதுவே அவனது முன்னேற்றத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கிறது என்பது தேவ மனிதர் ஒருவரின் கூற்று. அனைத்தும் நன்றாக இருக்கும் சூழல்களைவிட, நெருக்கடியான சூழல்களில் நமக்கு நாமே என்ன பேசிக் கொள்ளுகிறோம் என்பது மிக முக்கியம்.

இதேபோன்ற சூழலில் தாவீதும் கடந்து சென்றிருக்கிறார். அப்போது அவர் என்ன செய்து அந்தச் சூழலில் இருந்து வெளியே வந்தார் என்பதை இந்தச் செய்தியில் தியானிக்க இருக்கிறோம். சங்கீதம் 56 இவ்விதமாக ஆரம்பிக்கிறது, பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்த போது யோனாத் ஏலம் ரிக்கோகீம் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும் படி தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.

கோலியாத் எனும் பெலிஸ்தரின் நம்பிக்கை நட்சத்திரத்தை ஒரு கவண்கல்லில் சாய்த்து ஒரே நாளில் இஸ்ரவேலிலும், அண்டை நாடுகளிலும் பிரபலமடைந்த தாவீதை இஸ்ரவேலரின் ஜென்ம விரோதிகளான பெலிஸ்தர்கள் பிடித்து பழிதீர்த்துக்கொள்ள ஆவலாய் இருந்தார்கள். அந்தச் சூழலில் சிங்கத்தின் கெபிக்குள் சென்று மாட்டுவதுபோல தாவீது அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். அந்தச் சூழலில் அவர் பாடியதுதான் இந்த 56-ஆம் சங்கீதம்.

அதில் மூன்றாம் வசனத்தில் “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்” என்று எழுதியிருக்கும் தாவீது அடுத்த வசனத்திலேயே தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? என்று முழங்குகிறார். முந்தின வசனத்தில் பயப்படுவதாகச் சொல்லும் அவர் அடுத்த வசனத்திலேயே நான் பயப்படேன் என்று சொல்ல என்ன காரணம்? இந்த இரண்டு வசனங்களுக்கும் இடையே என்ன நடந்தது?

இதற்கான பதிலை நாம் 1 சாமுவேல் 30:6- ஆம் வசனத்தில் பார்க்கலாம். தாவீது நெருக்கடியான சூழல்களைச் சந்திப்பது அரிதானதல்ல. அவர் அடிக்கடி நெருக்கடிகளுக்குள் கடந்து செல்லும் அனுபவமுடையவர் என்பதை வேதாகமத்தில் நாம் பல இடங்களில் வாசிக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில் அவர் என்ன செய்கிறார்?

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளின் நிமித்தம் மனக்கிலேசம் அடைந்ததினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் தான் திடப்படுத்திக்கொண்டான். (1 சாமுவேல் 30:6) ஆம், தாவீது தன்னைத் தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொள்ளும் பழக்கமுடையவர். எப்படி நம்மை நாமே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொள்வது. அதையும் நாம் தாவீதிடமிருந்தே கற்றுக்கொள்ளலாம். சங்கீதம் 43- இல் அவர் தன் ஆத்துமாவுடன் பேசுவதைக் காணமுடிகிறது.

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். (சங்கீதம் 43:5)

ஆம், நம்மைநாமே கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொள்ள கர்த்தரை நோக்கிக் காத்திருப்பதே வழியாக இருக்கிறது. அவரை நோக்கிக் காத்திருத்தல் என்பது அவரிடம் நமது கவனத்தைக் குவிப்பதைக் குறிக்கிறது. நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான அவரையே நோக்கி அமர்ந்திருக்கும்போது நமக்கு அவரிடத்திலிருந்து இரட்சிப்பு வருகிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/n_Anpq4rcP0

>