கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் என்று சங்கீதம் 128:1,2 வசனங்கள் சொல்லுகின்றன. கர்த்தருக்கு பயந்து, அவரில் அன்புகூர்ந்து அவருடைய வழிகளில் நடப்பதுதான் ஆசீர்வாதம்.
நாம் அவரில் அன்புகூர்ந்து, அவரை சேவிப்பதையும், அவரிடத்தில் மனத்தாழ்மையாய் இருப்பதையும் தவிர வேறொன்றையும் கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்ப்பதும் இல்லை. (உபாகமம் 10:12,13) நம்முடைய கரத்தின் கிரியைகளை வாய்க்கப்பண்ண வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆனால் அதற்கு முன்பதாக நம் இருதயத்தை நேராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டமாயிருக்கிறது. எனவே நமக்கு நன்மையுண்டாகும்படி அவருடைய வழிகளை நமக்குக் கற்றுத்தருகிறார். அவருடைய வழிகள் பாரமானவைகளல்ல, அவர் அடக்குமுறை செய்து நம்மை பணியவைப்பதும் இல்லை, அவருடைய வழிகள் எரிச்சலூட்டக்கூடியவை அல்ல, அவை நமக்கு துக்கத்தை ஏற்படுத்தக்கூடியவைகளும் அல்ல.
நமது கரத்தின் கிரியைகள் சம்பந்தமான விஷயத்தில் நமது இருதயம் எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரென்றால் முதலாவது நாம் என்ன செய்கிறோமோ அதை பணத்துக்காகவோ, அல்லது சுயநன்மைக்காகவோ செய்யாமல் தேவனுக்காக செய்ய வேண்டும். இரண்டாவதாக மக்கள்மீது அன்புடன் நமது வேலையைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது நம்முடைய கரத்தின் கிரியையை தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார். ஆசீர்வதிப்பது தேவனுக்கு பெரிய விஷயமே அல்ல, அதற்கு முன்பாக நம்முடைய இருதயத்தில் ஏற்படவேண்டிய மாற்றமே காரியம்.
நாம் செய்யும் காரியங்களுக்கு “அன்பு” என்பது உந்துகோலாக இல்லாவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதனால் பலனில்லை. நாம் அன்போடு செய்யும் காரியம் ஒரு இனிமையான இசையைப்போலவும், அதே காரியத்தை இருதயத்தில் அன்பின்றி செய்தால் அது வெறும் இரைச்சலைப் போலவும் இருக்கிறது.
இறுதியாக, நம்மை அவர் வளைத்து, நம்மை ஆசீர்வதித்தபடியால் அவரைக் கனம்பண்ணும்படிக்கு அவருக்கு உற்சாகமாகக் கொடுக்க வேண்டும். இதிலும் மனதில் நிலைதான் பிரதானமானது. ஆபேலின் காணிக்கைபோல நாம் முதன்மையானதையும், சிறந்ததையும் அவருக்கு உற்சாகத்தோடும் நன்றியுணர்வோடும் கொடுக்கும்போது நம்முடைய கைகளின் பிரயாசங்களை தேவன் கைகூடிவரப்பண்ண வல்லவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/jXbUFj2rZQo