விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள் என்று ரோமர் 14:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். அதன் பொருள் இருக்கிறவண்ணமாகவே அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான். நாம் அவர்களை இருக்கிறவண்ணமாக ஏற்றுக்கொண்டபிறகுதான் தேவனால் அவர்களை இருக்கவேண்டிய வண்ணமாக மாற்ற இயலும். கர்த்தராகிய இயேசுவும் நம்மை நாம் இருந்தவண்ணமாகவே ஏற்றுக்கொண்டு, அதன்பின்புதான் பூரணப்படுத்துகிறார். அதே மாதிரியை நாமும் சகோதர சிநேகத்தில் பின்பற்ற வேண்டும்.
நம்மால் யாரையும் மாற்ற முடியாது. மாற்றத்தை தேவன்தான் கொண்டுவரமுடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் குறைவுள்ளோரை ஏற்றுக்கொள்வது மட்டுமே. நம்முடைய பொறுமையைப் பயன்படுத்தித்தான் தேவன் அவர்களுக்குள் மாற்றங்களைக் கொண்டுவருகிறார். அப்படி பொறுமை காப்பதற்கான பக்குவத்தையும் தேவனே நமக்குள் உருவாக்குகிறவராக இருக்கிறார். அப்படித்தான் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தின தன்னுடைய நண்பர்களுக்காக கரிசனையோடு வேண்டுதல் செய்யும் மனப்பக்குவத்தை தேவன் தம்முடைய தாசனாகிய யோபுவுக்குள் உருவாக்கியிருந்தார்.
நாம் பெலமுள்ளவர்களானால் நாம் பெலவீனர்களைத் தாங்க வேண்டும். ஒருவன் பெலமுள்ளவன் என்பதற்கு சான்று என்னவென்றால் பெலவீனமுள்ளவர்களைத் தாங்குவதற்கு அவனுக்கு பெலன் இருக்க வேண்டும். அந்தப் பொறுமை பொறுமையாகத்தான் நமக்குள் உருவாகும். ஆனால் அதை நமக்குள் நிச்சயம் உருவாக்க தேவன் போதுமானவராக இருக்கிறார்.
குறைவுள்ளவர்களை மறுசீரமைக்கும் பணியில் நாம் ஆவியானவரோடு இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்களை மட்டுப்படுத்தாமல், அற்பமாக எண்ணாமல், அவர்களுக்குத் தடுக்கலாக நாமே மாறிவிடாமல், அவர்களுடைய வேகத்துக்கு நாம் நடந்தால்தான் நம்முடைய வேகத்துக்கு அவர்களைக் கொண்டுவர முடியும். சாந்தமும் மனத்தாழ்மையுமான கிறிஸ்துவின் ஆவியோடுதான் இதை நாம் செய்து முடிக்க வேண்டும். இந்தப் பணி முற்றுப்பெற நிச்சயம் நேரம் பிடிக்கும். அது தேவன் நியமித்த நேரம். அந்த நேரம் வரும்வரை நமக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமாயிருக்கிறது. அதையும் தேவனே நமக்கு அருள வல்லவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/7O-iA_eCDlg