சகோதர சிநேகத்தில் சிக்கல்களும், விரிசல்களும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதையும் தாண்டி அந்த சகோதர சிநேகத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டுமானால் கர்த்தருடைய ஒத்தாசையின்றி அது சாத்தியமல்ல. தேவனே இருதிறத்தாருடைய மனதையும் சமாதானத்துக்கு பக்குவப்படுத்துகிறார். நம்முடைய ஜெபங்கள் இதில் பெரும் பங்காற்றுகிறது. நம்முடைய ஜெபங்கள் நமது இருதயத்தையும், நாம் யாருடன் ஒப்புரவாகவேண்டுமோ அவர்களது இருதயத்தையும் ஆயத்தப்படுத்துகிறது. தேவன் ஒப்புரவாகுதலுக்கான நல்வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறார். நாம் அதை ஞானமாக பயன்படுத்திக்கொள்ளும்போது விரிசல்கள் மறைந்து சகோதர சிநேகம் மறுபடியும் தழைக்கிறது.
எலியா நம்மைப்போல பாடுள்ள மனுஷனாக இருந்தும் தான் எதிர்பார்த்த உள்ளங்கையளவு மேகத்தைக் காணும்வரை கருத்தாய் ஜெபித்ததுபோல ஒப்புரவாகுதலுக்கான நல் அடையாளம் தோன்றும்வரை கர்த்தரை விசுவாசித்து, அந்த விசுவாசத்தை அறிக்கைசெய்து, நன்றி சொல்லி ஜெபித்துக் காத்திருப்பது அவசியம். ஏற்ற காலத்தில் கர்த்தர் காரியங்களை அழகாய் வாய்க்கச்செய்வார். காரியங்கள் தாமதிக்கும்போது நாம் தளர்ந்துபோக வேண்டியதில்லை. நம்மில் நற்கிரியைகளைத் தொடங்கினவர் அதை நிச்சயம் நிறைவேற்றி முடிப்பார். யாருடைய இருதயத்தில் என்னென்ன தெய்வீக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமோ அதை அவர் ஏற்கனவே செய்யத் தொடங்கிவிட்டார்.
நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் எந்த சகோதரன் அல்லது சகோதரியுடன் நமக்கு பிணக்கு இருக்கிறதோ அவர்கள் செய்த காரியங்களை சகித்து, அந்தக் காரியங்கள் குறித்த ஞாபகங்களை விட்டுவிட வேண்டும். அதன்பின்புதான் நாம் ஒப்புரவாகுதல் என்ற அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும். ஒருவேளை நாம் மன்னிக்கவில்லை என்றால் சாத்தான் அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வான். அது நமக்குப் பாதகமாக அமைந்துவிடும். நம்மால் மன்னிக்க முடியவில்லையென்றால் கர்த்தருடைய உதவியை நாடினால் அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்ய ஆயத்தமாக இருக்கிறார். அவர் வார்த்தையாகிய விதையை நமது இருதயத்தில் விளையச்செய்து அற்புதமான மாற்றங்களை நமக்குள் கொண்டுவருகிறார்.
இவையெல்லாம் தற்காலத்தில் கடினமாகத் தோன்றினாலும். ஒருகாலகட்டம் வரும்போது நம்மைப் பார்க்க நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நானா இவ்வளவு பக்குவமடைந்துவிட்டேனென்று. ஆம், இது கர்த்தரால் ஆனது இது நம் கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கர்த்தர்தாமே நம் உள்ளங்களை பக்குவப்படுத்தி சகோதர அன்பில் நம்மை வளரச்செய்வாராக!
“செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
“செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/kEODPOj_XsM