ஞானத்தின் ஏழு தூண்கள்- ஞானம்

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்- ஞானம்

ஞானத்தின் ஏழு தூண்கள்- ஞானம்

ஞானத்தின் ஏழு தூண்களில் ஞானம் என்பது இரண்டாவதாகும். ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் ஆத்துமா அறிவோடு இருப்பது நல்லது என்று நாம் எதிர்மறையாகப் பொருள் கொள்ள முடியும். நம் ஆத்துமா வாழ்கிறதுபோல நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கும்படியாக தேவன் நம்மிடத்தில் அந்த ஞானம் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு என்று நீதிமொழிகள் 9:10 சொல்லுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு பரிசுத்தரின் அறிவே அறிவு என்கிற வார்த்தையை அவரை அறிந்துகொள்வதே உண்மையான புரிந்துகொள்ளுதல் என்று மொழிபெயர்த்திருக்கிறது. இது சாலப் பொருத்தமான மொழிபெயர்பாகும்.

ஒரு விஷயத்தை அறிந்துகொள்ளுதல் என்பது அறிவு, அதைப் புரிந்து கொள்ளுதல் விவேகம், அறிந்து புரிந்துகொண்டதை செயல்படுத்துவதே ஞானம். அந்த ஞானத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது? கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நீதிமொழிகள் 2:6) அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார் என்று அடுத்த வசனம் சொல்லுகிறது. அதை நமக்குக் கொடுக்க அவர் பிரியமாய் இருக்கிறார். அவர் அறிந்து புரிந்து செயல்படுவதைப் போலவே நாமும் செய்து தெய்வீக வெற்றியை அடைவது அவருக்குச் சித்தமாக இருக்கிறது. நெகெமியாவுக்கு அலங்கத்தைக் கட்டும் முயற்சியில் பல்வேறு இன்னல்களும் தடைகளும் வந்தபோது ஆலோசனைக் கர்த்தராக தேவன்தாமே இருந்து அவரை வழிநடத்தியதுபோல நம்மையும் வழிநடத்த அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

அறிவை நாம் மூன்றுவகைகளாகப் பிரித்தறியலாம். முதலாவதாக இயற்கையான அறிவு, அதாவது ஒருவிஷயத்தை பார்க்கும்போதோ அல்லது கேட்கும்போதோ இயற்கையாக நமக்குள் தோன்றும் அறிவு ஆகும். இரண்டாவதாக தேவன் நமக்குத் தரும் வெளிப்படுத்தலின் அறிவு. அவரே நமக்கு அருளும் அந்த அறிவு இல்லாமல் நம்மால் அவரை அறிந்துகொள்ளவே முடியாது. இந்த அறிவு ஒரு ஆரம்பம்தான். மூன்றாவதாக அவரோடு ஐக்கியம் கொள்ளுதலின் விளைவாக நமக்குள் ஊறும் அறிவு. இந்த அறிவுதான் நம்மை அவரைப்போலவே மாற்றுகிறது.

தேவன் நமக்கு தமது அறிவை எப்படிக் கொடுக்கிறார்?

கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே தம்மை சாமுவேல் தீர்க்கனுக்கு வெளிப்படுத்தினார் என்று 1 சாமுவேல் 3:20,21 வசனங்கள் சொல்லுகின்றன. ஆம் தேவன் தமது வார்த்தையின் வழியாகத்தான் நமக்கு அறிவைப் புகட்டுகிறார். இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,…உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேயர் 1:9-11 வசனங்களில் எழுதுகிறார். இதை சுருங்க விளக்க முயன்றால், தேவனை அறிவது என்றால் அவரது சித்தத்தை அறிவது, அவருடைய சித்தத்தை எப்படி அறிவது? அவர் வார்த்தையை அறிவதன் மூலம் நாம் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள முடியும். ஆக, அவரது வார்த்தையே ஞானத்துக்காக ஆதாரம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/bLJw_BcCRtc

>