ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி…போதுமென்கிற மனம்

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி…போதுமென்கிற மனம்

ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி…போதுமென்கிற மனம்

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம் என்று 1 தீமோத்தேயு 6:6-8 வசனங்கள் சொல்லுகின்றது. தாசனாகிய யோபுவும் நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன் என்கிறார். (யோபு 1:21) இந்த இரு வசனங்களையும் நாம் வெறும் எழுத்துப்பூர்வமாக எழுத்துக்கொண்டால் அது நம்மை துறவு நிலைக்கு நேராகத் தள்ளிவிடும். வெறுமையாய் வந்து, வெறுமையாய் வாழ்ந்து வெறுமையாய் திரும்பிப்போவதுதான் வாழ்க்கை என்றாகிவிடும். தேவன் அப்படித்தான் சொல்லுகிறாரா?

தேவன் இந்த உலகத்தில் படைக்கும் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார். தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொல்லுகிறார். (எரேமியா 1:5) ஆக பூமியில் பிறக்கும் எவரும் வெறுமையாய் பிறப்பதில்லை. ஒரு நோக்கத்தை சுமந்துகொண்டு வருகிறவர்களாகத்தான் பிறக்கிறார்கள். அதே போல எவரும் வெறுமையாய் திரும்புவதுமில்லை. வெளிப்படுத்தல் 14:13 சொல்லுகிறது, “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார்”.

ஆக நாம் ஒரு தேவதிட்டத்தை சுமந்துகொண்டுதான் பூமியில் பிறக்கிறோம், அதை அவருடைய கிருபையால் நிறைவேற்றி, அந்த கிரியையையும் நாம் மரிக்கும்போது நம்முடன் கொண்டு செல்கிறோம். அதுதான் வாழ்க்கையின் வெற்றி. அப்படியானால் 1 தீமோத்தேயு 6:6 மற்றும் யோபு 1:21 வசனங்களுக்கு என்ன அர்த்தம். அவை பொருட்களைக் குறித்துப் பேசுகின்றன. இவ்வுலகப்பொருள் நிலையற்றது என உலகப்பொருளைத் தேடி பைத்தியமாக அலையும் நபர்களுக்கு உணர்த்தும்படி எழுதப்பட்டிருக்கிறது.

போதும் என்கிற மனநிலை என்பது “கிறிஸ்து என்னை விட்டு விலகாமலும், என்னைக் கைவிடாமலும் எப்போதும் இம்மானுவேலாய் என்னுடன் இருப்பது போதும்” என்ற மனநிலையைக் குறிக்கிறது. எனக்கு எதுவெல்லாம் வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேனோ அதுவெல்லாம் இப்போது என்னிடத்தில் இல்லாவிட்டாலும் என் மனம் திருப்தியோடுதான் இருக்கும் ஏனென்றால் கிறிஸ்து என்னோடிருக்கிறார் என்ற முதிர்ச்சியான மனநிலையை அது காண்பிக்கிறது.

எல்லாம் இருந்தும் அவரில்லை என்றால் ஒன்றுமில்லை. அவர் இருக்கிறார் வேறு ஒன்றுமில்லை என்றால் எல்லாம் இருக்கிறது என்று பொருள். தேவையான ஏதோ ஒன்று இல்லாததால் சிலருக்கு பயம் வந்துவிடுகிறது. வேறு சிலருக்கு தேவையில்லாத ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதால் பயம் வருகிறது. கர்த்தராகிய இயேசு நம்மோடிருந்தால் இந்த இருவிதங்களில் நமக்கு வந்த பயமும் நம்மைவிட்டு ஓடிவிடும்.

கர்த்தர் இன்றைக்கு, இப்போது நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கிறவராகவே இருக்கிறார். எதிர்காலத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய ஒன்று இப்போது நம்மிடம் இல்லையே என்று நினைத்து நாம் கலங்கக்கூடாது. அதை அந்த நேரத்தில் தேவன் நிச்சயம் தருவார். அவர் முந்தித் தருவதுமில்லை, தாமதிப்பதுமில்லை. சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார்.

கர்த்தர் இம்மானுவேலராய் கூடவே இருந்தபடியால்தான் வெறுங்கையாய் நதியைக் கடந்து சென்ற யாக்கோபு இரு பரிவாரங்களோடு திரும்ப முடிந்தது. அணிந்திருந்த துணியையும் இழந்து நிர்வாணியான யோசேப்பு ஒரு தேசத்தின் அதிபதியாகி ஜீவரட்சணை செய்கிறவனாய் மாற முடிந்தது. ஆம், நாம் சேவிக்கும் தேவன் அப்படிப்பட்டவர்தான்.

நாம் தேவனைப் புரிந்து கொண்டால் நமக்குள் இயல்பாகவே ஒரு முதிர்ச்சி வந்துவிடும். அந்த முதிர்ச்சியின் விளைவுதான் போதுமென்கிற மனம். அப்போஸ்தலனாகிய பவுல் அப்படிப்பட்ட மன முதிர்ச்சியுடையவராக இருந்தார். அதனால்தான், நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்று அவரால் கம்பீரமாகச் சொல்ல முடிந்தது. (பிலிப்பியர் 4:11-13) அப்பேற்பட்ட மனநிலையை கர்த்தர்தாமே நமக்கு தமது வசனத்தின் வாயிலால் அருள்வாராக! ஆமேன்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/BHooBFwa2Xk

>