ஞானத்தின் ஏழு தூண்கள்- பொறுமை

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்- பொறுமை

ஞானத்தின் ஏழு தூண்கள்- பொறுமை

பொறுமை என்றால் வாழ்க்கையில் ஏற்படும் முரணான சூழ்நிலைகளை மனதார, தைரியமாக ஏற்றுக்கொண்டு சரியான முறையில் அதைக் கையாண்டு முன்னேறிச் செல்வதாகும். உதாரணத்துக்கு நீங்கள் ஊட்டிக்கு ஒரு குறிப்பிட்ட வேலைக்காகச் செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருக்கும் குளிரை உங்களால் மாற்ற முடியாது. அங்கு குளிருகிறது என்பதற்காக உங்களை வேலையைக் கைவிட்டு திரும்பி வரவும் முடியாது. ஆனால் அங்கிருக்கும் சூழலுக்குத் தக்கவாறு நீங்கள் உங்களைத் தகவமைத்துக்கொண்டு நீங்கள் செய்துமுடிக்கும்படி சென்ற அந்த வேலையை வெற்றிகரமாக முடித்து திரும்புவீர்கள்.

அதுப்போலத்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று எபிரேயர் 12:2 சொல்லுகிறது. பொறுமை பின்வாங்கக்கூடியது அல்ல, தரித்து நிற்கக் கூடியதுமல்ல அது முன்னேறக்கூடியது. அப்படித்தான் நமது கர்த்தரும் சிலுவையை சகித்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.

சில நேரங்களில் நாம் நன்மைகள் செய்தாலும் அதற்குக் கைமாறாக தீமைகளே வந்து சேரக்கூடும். அப்படிப்பட்ட சூழல்களிலும்கூட பொறுமை அதை சகித்துக்கொண்டு முன்னேற நமக்கு உதவுகிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மக்களுக்கு நன்மைகள் பல செய்தும் அவருக்கு சிலுவையே கிடைத்தது. அந்த சிலுவையை அவர் சகித்துத்தான் சிங்காசனத்தை சுதந்தரித்துக்கொண்டார். இந்த விஷயத்தில் அவரே நமக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார். பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. (ரோமர் 15:6)

முதலாவதாக நாம் அவர் நமக்கு ஏற்கனவே சொல்லிச் சென்ற காரியங்களை கவனிக்க வேண்டும். அவர் உங்களுக்கு இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு என்றுதான் சொல்லிச் சென்றார். எனவே நாம் ஆச்சரியப்பட்டு பயப்படத் தேவையில்லை. அவைகளெல்லாம் அணிவகுத்து வரும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த சூழலிலும் அவரே நமக்கு ஆறுதலளித்து, நம்மை தைரியப்படுத்தி செயல்பட வைக்கிறவராக இருக்கிறார். நாம் அவருடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால் நாம் சந்தோஷப்பட்டு அவரைத் துதிக்கத்தான் வேண்டும். இந்தப்பாடுகளின் ஊடாகத்தான் நமக்கு மாபெரும் வெற்றி மகுடம் காத்திருக்கிறது.

இரண்டாவதாக நாம் அவரிடத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாடுகள் நிறைந்த சூழலிலும் நான் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 4:11 இல் கூறுகிறார். பவுல் என்ன கற்றுக்கொண்டார் என்றால் தன்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய தனக்கு பெலனுண்டு என்ற உண்மையைக் கற்றுக்கொண்டார். தான் தனித்துவிடப்படவில்லை என்பதைக் கற்றுக்கொண்டார்.

நாமும்கூட விருப்பத்துக்கு முரணான சூழல்களைக் கடந்து செல்லும்போது கர்த்தரிடம் இவ்விதமாகக் கேட்க வேண்டும். “ஆண்டவரே, இந்த சூழ்நிலையில் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? என்னிடத்தில் என்ன மாற்றத்தை நீர் ஏற்படுத்த விரும்புகிறீர்?” தேவன் என்ன மாற்றத்தை நம்மிடம் ஏற்படுத்த விரும்புகிறாரோ அந்த மாற்றத்தை அவர் நம்மில் செய்து முடிக்க நாம் நம்மை அவருக்கு அர்பணிக்க வேண்டும்.

நமது பரமப்பிதா நம்மை தமது குமாரனாகிய கிறிஸ்துவைப்போல மாற்ற விரும்புகிறார். அவர் சிலுவையை சகித்து சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதுபோல நாமும் நமது பாடுகளைச் சகித்து சூழ்நிலைகளின் சிங்காசனத்தில் அமர வேண்டும் என்று அவர் வாஞ்சிக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/eZ5n5UC7fXw

>