தன் கணவனுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் விரும்புவதை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒரு மனைவி “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று தன் கணவரிடம் கேட்கிறார். அதற்கு அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்று சொல்லாமல் “Surprise me!” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மனைவியின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
எதாகிலும் மிகச் சிறந்ததை செய்துகொடுத்து தன் கணவரை அசரடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு ஏற்படும் அல்லவா? ஆனால் அந்தக் கணவரோ எந்தப் பதட்டத்தையும் கொள்ளத் தேவையில்லை. அதே போலத்தான் உனக்கு சிறந்ததைத் தருவேன் என்று தேவன் வாக்குப்பண்ணாரானால் அதை நிறைவேற்றி முடிக்க வேண்டியது அவருடைய வேலை. நாம் பதட்டம் கொள்ள அவசியமே இல்லை. தேவனோ அழுத்தத்துடன் அல்ல, தனது வல்லமையை நமக்குக் காட்டி நம்மை அசரடிப்பதில் ஆவலாக இருக்கிறார்.
யாக்கோபு பிறக்கும்போதே அவனுக்கு ஒரு வாக்குத்தத்தம் அருளப்பட்டது. அதாவது மூத்தவனாகிய ஏசா இளையவனாகிய யாக்கோபைச் சேவிப்பான் என்பது. “ஆசீர்வாதம்” என்பது ஏற்கனவே யாக்கோபு தலையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை அடைந்துகொள்ள யாக்கோபு சுய முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார். அதன் எதிர்விளைவாக அவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இருபது வருஷம் நித்திரை என் கண்களுக்கு தூரமாயிருந்தது. (ஆதியாகமம் 31:40) என்று புலம்பும் அளவுக்கு யாக்கோபு வாழ்க்கையில் நெருக்கப்பட்டார். முடிந்த மட்டும் போராடிப் பார்த்துவிட்டு முடிவில் தேவனை மட்டும் சார்ந்து கொள்ளும் வழியை யாக்கோபு கற்றுக்கொண்டபின் தேவனிடத்தில் ஆசீர்வாதத்தைப் பெற்று எத்தன் என்னப்பட்ட அவர் தேவனுடைய பிரபுவாக உயர்த்தப்பட்டான்.
நாம் யோசிக்கிறவிதமாக கர்த்தர் யோசிக்கிறதுமில்லை, நாம் செயல்படுகிறவிதமாக அவர் செயல்படுகிறதுமில்லை. ஆனாலும் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். அவர் செய்ய நினைத்தது தடைப்படாது. இதைப் புரிந்து கொண்டால் விரக்தியில்லை. அவர் செய்வார் என்பதில் மட்டும் நம்பிக்கை இருந்தால் போதும். எப்படி செய்வார், யாரைக்கொண்டு செய்வார், எவ்வளவு செய்வார் என்பதை ஆராயத் தேவையில்லை. அப்போதுதான் நமது ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
தேவன் வாக்குத்தத்தத்தைக் கொடுத்த பின்பு பல காலங்கள் சென்றபின்னரே அந்த வாக்குத்தத்தம் நம் வாழ்வில் நிறைவேறுவதை நாம் காணும்போது, இவ்வளவு காலங்கள் தேவன் சும்மா இருந்தார் என்று எண்ணக்கூடாது. அவர் வாக்குத்தத்தம் கொடுத்த நாளிலேயே அதை நிறைவேற்றுவதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் அது நம் கைகளில் வந்து சேர ஒரு நாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளில்தான் நாம் அதை நமது மாம்சக் கண்களால் பார்த்து, “இது கர்த்தரால் உண்டாயிற்று, நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கொண்டாடுகிறோம்.
தேவன் தான் செய்ய நினைத்ததை கட்டாயம் செய்வார். அவர் செய்ய நினைத்ததை முறியடிக்கவோ, எதிர்த்துப் போராடவோ அல்லது தடைசெய்யவோ அண்ட சராசரத்திலும் யாருக்கும் அதிகாரமில்லை, வல்லமையுமில்லை. ஆனால் அதை தனது நேரத்தில் தனது பாணியில்தான் செய்வார். அவர் அதை செய்துமுடிக்கும்வரை விசுவாசத்துடன் காத்திருப்பது மட்டுமே நம்முடைய வேலை. பொறுமையிழந்து நாம் களத்தில் இறங்குவோமானால் தேவையற்ற பிரச்சனைகளை நமக்கு நாமே இழுத்துக்கொள்ளுவோம்.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:8,9)
மேற்கண்ட வசனம் சொல்லுகிறபடி, நாம் யோசிக்கிறவிதமாக அவர் யோசிக்கிறதுமில்லை, நாம் செயல்படுகிறவிதமாக அவர் செயல்படுகிறதுமில்லை. ஆனாலும் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். அவர் செய்ய நினைத்தது தடைப்படாது. இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் விரக்தியில்லை.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/cfkibFQ7txI