சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்கிற உணர்வும், சூழ்நிலைகள் பாதகமாக மாறும்பொழுது கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார் என்கிற உணர்வும் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும்போதும் கர்த்தர் நம்மோடுகூட இருந்து அந்த சூழ்நிலைகளை மாற்றக்கூடியவராக இருக்கிறார் என்கிற சத்தியத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
கர்த்தர் என்னோடுகூட இருக்கிறார் என்கிற அப்படிப்பட்ட விழிப்புணர்வுதான் தேவபக்தியாக இருக்கிறது என்று நாம் ஏற்கனவே தியானித்திருக்கிறோம். அந்த மெய்யான தேவபக்திதான் தெய்வீக ஆசீர்வாதத்தை நமது வாழ்வில் கொண்டு சேர்ப்பதாக இருக்கிறது. தேவபக்தியாக வாழ விரும்பும் யாவரும் துன்பப்படுவார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கர்த்தர் நம்மோடுகூட இருந்து நம்மை விடுவிக்கிறவராக இருக்கிறபடியால் உங்களை நீங்களே குற்றம்சாட்டிக்கொண்டிராமல், இடுக்கமான நேரங்களிலும் இறைமகன் இயேசுவின் கரத்தை உங்கள் வாழ்வில் உணர்ந்து, சோதனைகளை அவரோடுகூட இணைந்து வெல்லும் வழிவகைகளை நோக்குங்கள்.
எல்லா தேவனுடைய மனிதர்களின் வாழ்விலும் நெருக்கங்கள் வந்தன. அவர்களோடிருந்த எல்லோரும் அவர்களை தனியே விட்டுப்போன உணர்வை அவர்கள் அனுபவித்தனர். ஆனாலும் மனிதர்களைக் குறித்து முறுமுறுக்காமல் தேவனைநோக்கிப் பார்த்து வெற்றியைப் பெற்றுக்கொண்டார்கள். சோகமான நேரங்களில் சோகப்பாடல்களைப் பாடிக்கொண்டிராமல், இரட்சணியப்பாடல்கள் பாடி தங்கள் சோகச்சூழல்களை மாற்றிக்கொண்ட தேவதாசர்களை நாம் வேதத்தில் சாட்சியாகப் பார்க்கிறோம். நமது அனுபவமும் அதுவாகட்டும்…
இப்படிப்பட்ட அனுபவங்கள் நமக்கு ஒரு முதிர்ச்சியையும், பக்குவத்தையும் அளிக்கின்றன. இதுபோன்ற அனுபவங்களில் கடந்துபோய் தேவகிருபையால் வென்றவர்களால்தான் நானல்ல, தேவனே என்று அவருக்கு மகிமையைச் செலுத்த முடியும். ஆம் இத்தகைய தெய்வீக ஆசீர்வாதங்கள் நமக்குள் தெய்வீக சுபாவங்களை விதைக்கின்றன. அல்லேலூயா!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/3vwdAs0R_zk