தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் 2

Home » தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் 2

தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் 2

தேவன்மேல் பக்தி வைத்தவர்கள் சகோதரன் மேலும் சிநேகம் வைக்கவேண்டும் என்கிற தேவனுடைய நியமத்தை தியானித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னோடியான கர்த்தராகிய இயேசு தாம் நமக்குச் செய்யாததையும், நம்மில் செய்யாததையும் நாம் செய்யவேண்டும் என்று ஒருபோதும் நம்மை நிர்பந்திப்பதில்லை. அவர் எதைச் செய்து காண்பித்தாரோ அதைத்தான் நாமும் அவருடைய முறைமையிலேயே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் மேலான அன்பு ஒன்றுமில்லை என்கிற வார்த்தையை செய்து காட்டியவரல்லவா அவர்?

அன்பற்ற சுபாவங்களும், பழிவாங்கும் உணர்வுகளும், கோபம், கசப்பு, வைராக்கியம் போன்ற உணர்வுகளும் நமக்கு மரபுவழியாக தொடருகிறது. ஆனால் நாமோ புது சிருஷ்டிகளாக மாற்றப்பட்டவர்கள், குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள், தேவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள். நாம் அவரை மையப்படுத்தி, அவரைப்போல வாழ ஆரம்பிக்க வேண்டும்.

நமது அன்பு மாயமற்றதாக, அதாவது நடிப்பற்றதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது சாத்தியமா என்றால் தேவ பெலனால் நிச்சயமாக சாத்தியமே!

அந்தச் செயலை பரிசுத்த ஆவியானவர்தான் நம்மில் தொடங்கி வைக்கிறார். நாம் விசுவாசியாதவர்களாக இருந்தபோதே பாவத்தைக் குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் நமக்குக் கண்டித்து உணர்த்தி, நம்மில் அன்பையும்,விசுவாசத்தையும் துவங்கி வைத்தவர் அவரே! அவராலே சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து, அதன் விளைவாக ஆத்துமாக்களை சுத்தமாக்கிக்கொண்டவர்களாய் நம்மால் ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்புகூற முடியும். இது நிச்சயமாக நமது சொந்த பெலத்தால் சாத்தியமில்லை. அவரை விசுவாசிப்பதாலும், சார்ந்துகொள்வதாலும் மட்டுமே சாத்தியம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Rc5LKwql2hY

>