கர்த்தராகிய இயேசு சிலுவையில் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதுதான் நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதில் ஜெபமும் உள்ளடக்கம். அவர் ஏற்கனவே செய்துமுடித்ததை இனி மறுபடியும் செய்யப் போவதில்லை. அவர் ஒரூதரம் ஏற்கனவே செய்து முடித்ததை செயல்படுத்தவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஏற்கனவே உட்காந்திருக்கும் ஒரு நபரை உட்கார் என்று சொல்வது எப்படிப் பொருத்தமற்றதோ அதுபோலவே அவர் ஏற்கனவே செய்து முடித்த கிரியைகளை மறுபடியும் செய்யச் சொல்லி ஜெபிப்பதும் பொருத்தமற்றது. எனவே வார்த்தையை உள்ளபடி அறிந்தால்தான் சரியாக நம்மால் ஜெபிக்க முடியும். அவர் சிலுவையில் “முடிந்தது” என்று சொன்னார். என்னவெல்லாம் முடிந்தது என்ற அறிவு நமக்கு இருக்குமானால் அவர் முடித்ததை நாம் செயல்படுத்தி, அதை வாழ்வின் அனுபவமாக்க முற்படுவோம்.
பரிசுத்த ஆவியின்படி ஜெபிப்பது என்பது ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, அவருடைய வல்லமையின்படி ஜெபிப்பதாகும். ரோமர் 8:27- ஆம் வசனத்தில் ஆவியானவர் நமக்காக ஜெபிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதே அதிகாரம் 34- ஆம் வசனத்தில் கிறிஸ்து நமக்காக ஜெபிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நம்மையும் இடைவிடாமல் ஜெபிக்கும்படி வேதம் அறிவுறுத்துகிறது. இப்படி மூவரும் பிதாவின் சித்தப்படி ஒருமனமுள்ளவர்களாய் ஜெபிப்பதால் அந்த ஜெபம் நமக்கு அருளப்படுகிறது.
ஆவியானவரும், குமாரனாகிய கிறிஸ்துவும் பிதாவின் சித்தப்படிதான் ஜெபிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த மூவரில் நாம் மட்டுமே தடம் மாற முடியும். நாமும் குமாரனோடும், ஆவியானவரோடும் ஜெபத்தில் ஒருமனப்பட வேண்டும் என்றால் நாம் பிதாவின் நன்மையும், பிரியமுமான சித்தம் இன்னதென்கிற அறிவினால் நிறைந்திருக்க வேண்டும். நாம் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்திருந்தால்தான் அவரைக்குறித்த விசுவாசத்தால் நமது இருதயம் நிறைந்திருக்கும், இருதயத்தின் நிறைவினால் நாவும் விண்ணப்பம் பண்ணும். அவரை அறிகிற அறிவினாலே கிருபையும் சமாதானமும் நமக்குள் பெருகும்.
ஜெபத்தில் இத்தகைய நிலைக்கு நம்மைக் கொண்டு செல்ல வார்த்தையை அறிந்திருப்பதே, அதாவது உபதேசமே பிரதானமாக இருக்கிறது. சரியான உபதேசத்தின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை அர்ப்பணம் நிறைந்ததாக மாறுகிறது. இருதயத்தை வார்த்தையினால் நிறைத்து வைத்திருக்கும் ஒரு நபரை தேவசித்தத்துக்கு நேராகத் திருப்புவது என்பது 24 சக்கரங்கள் கொண்ட ஒரு பெரிய வாகனத்தை பவர் ஸ்டியரிங் கொண்டு திருப்புவது போல எளிதானதாகும்.
மேலும் உபதேசம் நம்மை ஒழுக்கத்துக்கு நேராகவும் வழிநடத்துகிறது. அது நமது கவனத்தை முழுவதுமாக அவர்மீது குவிக்க உதவுகிறது. அவர்மீது கவனத்தை முற்றிலும் குவித்த ஒருவர் செய்யும் ஜெபம் பரிசுத்த ஆவிக்குள் நிறைந்த தேவசித்தத்தின்படியான ஜெபமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/7WwWiebDf0c