பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் உறுதி

Home » பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் உறுதி

பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம் உறுதி

வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வது என்றால் முதலாவதாக நாம் கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திருப்பது, இரண்டாவதாக நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாக இருப்பது ஆகும். நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதி என்றால் என்னவென்று இந்தச் செய்தியில் நாம் தியானிக்கலாம்.

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம் என்று எபிரேயர் 4:14 சொல்லுகிறது. அவரை அறிக்கையிடுவது என்றால் அவரையும் அவர் நமக்காக செய்து முடித்ததையும் அங்கீகரித்து, அறிக்கை செய்து அனுபவமாக்கி கொள்வதாகும்.

அவர் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற உறுதியாய் இருக்கிறபடியால் நாமும் அறிக்கையிடுகிறதில் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறதுபோல நம்மையும் அறிக்கையில் உறுதியுள்ளவர்களாய் மாற்ற அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

வார்த்தையைப் பெற்றுக்கொண்டவுடன் நமக்கு அதுகுறித்த புரிதல் ஏற்படுகிறது. புரிந்துகொண்ட இருதயம் அறிக்கையிடுகிறது. அந்த அறிக்கை நமது நம்பிக்கையின் நிச்சயத்தை நிலைநிறுத்தக் கூடியதாகவும், நாம் கர்த்தர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடியதாகவும், நமது நடக்கைகளை ஒழுங்குபடுத்தி நம்மை சீர்படுத்தி சிறப்பாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இவை மூன்றையும் ஒவ்வொன்றாக தியானிப்போம்.

  • அறிக்கை நிலைநிறுத்தக்கூடியது:

அறிக்கை நம்பிக்கையின் நிச்சயத்தை நிலைநிறுத்தக்கூடியதாக இருக்கிறது. நான் விசுவாசித்தேன் ஆகையால் பேசுகிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதிலிருந்து அவர் தமது விசுவாசித்ததைக் குறித்து எவ்வளவு நிச்சயமுள்ளவராய் இருந்தார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். தாவீது தன்னைத்தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டான் என்று வேதம் சொல்வதும் இதைத்தான். தாவீது எப்படி தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார்? வேத வார்த்தையை அறிக்கையிடுவதன் மூலமாகத்தான். அவரது அறிக்கையை அவரது பல சங்கீதங்களில் நம்மால் வாசிக்க முடியும். ஆம், அறிக்கை நம் நம்பிக்கையை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவுகிறது.

  • அறிக்கை வெளிப்படுத்தக்கூடியது:

அறிக்கை நாம் கர்த்தர் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவர் நமக்கு எவ்வளவு நன்மை செய்கிற தேவனாக இருக்கிறார் என்பதை வேதம் முழுவதும் காணமுடியும். அந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டு நாம் அறிக்கை செய்யும்போது அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படுகிறது.

  • அறிக்கை ஒழுங்குபடுத்தக்கூடியது:

நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்று உபாகமம் 30:14 சொல்லுகிறது. நாம் அறிக்கையிடுவதன் மூலம் எதை அறிக்கையிடுகிறோமோ அதை நமது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த வழிநடத்தப்படுகிறோம். அதற்காக கிருபையை நமக்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தருகிறார். அவரே நமக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியும் இருக்கிறார்.அவர் தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணினவர் என்று 1 தீமோத்தேயு 6:14 அவரைக் குறித்து சாட்சிபகருகிறது. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/equrAtzFBPo

>