லூக்கா 8:15 இல் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறது. வசனத்தை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன் தருவது என்றால் என்ன என்பதை நாம் தியானிக்க இருக்கிறோம். வசனத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர்கள் தான் பொறுமையுடன் பலன் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு விதமாக இதை சொல்வதாக இருந்தால் விதையைப் பற்றிக்கொள்வது தான் விளைச்சல் உடையவர்களாக நம்மை மாற்றக்கூடியதாக இருக்கிறது. அதை இறுகப் பற்றிக்கொண்டு பலன் கொடுக்கும் வரைக்கும் காத்துக்கொள்ள வேண்டும் விளைச்சல் வரும்வரை விதையானது நிலத்தில்தான் இருக்க வேண்டும். அதுபோல விதையாகிய வாக்குத்தத்தங்கள் வாழ்வின் அனுபவங்களாக மாறும் வரைக்கும் விதையாகிய அந்த வாக்குத்தத்தம் நம்முடைய இருதயமாகிய நிலத்திலே நிலை கொண்டிருக்க வேண்டும். நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு என்று அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகிறார். (2 தீமோத்தேயு 3:14) எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற கேள்விக்கு அவரே பதில் தருகிறார்.
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:14,15)
ஆம் இன்னாரிடத்தில் கற்றோம் என்ற விஷயமே கற்றுக்கொண்ட காரியத்தின் மேன்மையையும், உண்மைத் தன்மையையும் காட்டக்கூடிய உரைக்கல்லாக இருக்கிறது. அதே விசுவாசத்தோடுதான் பவுல் 2 தீமோத்தேயு 1:12 இல் தான் அனுபவித்து வரும் பாடுகளை விவரித்துக்காட்டி இந்தப் பாடுகளால் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனெனில் இது எவ்விதமாய் முடியும் என்பதை நான் நிச்சயித்திருக்கிறேன். அப்படிப்பட்ட நிச்சயத்தை நான் கொண்டிருக்கக் காரணம் நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்திருக்கிறேன் என்று எழுதுகிறார்.
முதலாவது நிச்சயம் இருக்க வேண்டுமென்றால் கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக்கொண்டதை புரிந்துகொள்வதன் மூலம்தான் கற்றுக்கொண்டதை இறுகப் பற்றிக்கொள்ள முடியும். இந்தச் சூழலில் சந்தேகங்கள் எழுவது இயல்புதான். ஆனால் சந்தேகங்கள் வரும்பொழுதுதான் கர்த்தர் சத்தியத்தை கொண்டு நிச்சயத்தை ஏற்படுத்துகிறார்.
2 கொரிந்தியர் 1:8-10 வசனங்களில் தான் மரணத்துக்கு மிகவும் சமீபமாயிருந்த ஒரு சூழலை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுகூறுகிறார். ஆனால் அந்த சமயத்திலும்கூட நாங்கள் எங்கள் கவனத்தை மரணத்தை நோக்கி திருப்பாமல், மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கிறவரை நோக்கி திருப்பியபடியால் எங்களுக்கு சகாயம் கிடைத்தது, நாங்கள் தப்புவிக்கப்பட்டோம் என்கிறார்.
யோவான் 6:68 இல் அப்போஸ்தலனாகிய பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று அறிக்கையிடுவதைக் காணமுடியும். ஆம் நாம் அவருடைய வார்த்தையைப் புரிந்துகொண்டால் அவரிடத்தில் மட்டுமே நமக்கு சகாயம் கிடைக்கும் என்ற நிச்சயத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
வசனத்தைக் குறித்த நிச்சயம், அந்த வசனத்தை யாரிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதைப் பார்த்தோம். நமக்குள் வாசம்பண்ணி நமக்கு வசனத்தைத் தந்து நாம் அதை புரிந்துகொள்ளவும் உதவிசெய்பவர் ஆவியானவர் என்று 1 யோவான் 2:27 கீழ்கண்டவாறு தெளிவாகச் சொல்லுகிறது. நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
ஆம், நாம் அவராலே கற்றுக்கொண்டும், அவரிடத்திலேயே விளக்கங்களைப் பெற்று புரிந்துகொண்டும் இருக்கிறபடியால் நாம் கற்றுக்கொண்டவைகளைக் குறித்த நிச்சயம் நமக்கு இருக்கிறது. அந்த நிச்சயம் நமக்குள் இருக்கிறபடியால் நாம் கற்றுக்கொண்ட சத்தியங்களில் நிலைத்திருக்கிறோம்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/RqJfGFXK8bU