பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – ஆயத்தம்

Home » பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – ஆயத்தம்

பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – ஆயத்தம்

கர்த்தர் நமக்கென்று ஆயத்தம் பண்ணின ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளும்படிக்கு நாம் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ண வேண்டும் என்பது அவரது சித்தமாய் இருக்கிறது. அந்த விண்ணப்பமானது நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது.

ஒரு நன்மையை பெற்றுக்கொள்ளவும், அதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கவும் மனதில் ஒரு ஆயத்தம் என்பது அவசியமாக இருக்கிறது. நாம் எதைப் புரிந்துகொள்கிறோமோ அதைத்தான் செயல்படுத்த முடியும். கர்த்தர் தாம் நமக்கென்று ஆயத்தம் பண்ணினவைகளை நம்மிடம் கொடுக்கும்போது என்ன மனநிலையுடன் கொடுக்கிறார் என்பதை புரிந்துகொண்டால்தான் நாமும் அதே மனநிலையில் அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கமுடியும்.

மனந்திரும்பிய மைந்தன் உவமையில் வரும் அந்த மூத்தகுமாரனின் மனநிலையை கவனித்துப் பாருங்கள். அவன் கொடுக்கவும் ஆயத்தமாயில்லை, பெற்றுக்கொள்ளவும் ஆயத்தமாய் இல்லை. அவன் ஆசீர்வாதம் என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தான். யாக்கோபு ஆசீர்வாதத்தை தந்திரமாக பறித்துக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையோடு இருந்தான். ஆனால் தேவனுடைய முறைமை வேறு. அவர் நமக்கு அதை இலவசமாகக் கொடுக்கிறார். அதாவது அவருடைய கிருபை நமக்குக் கொடுக்கிறது, நம்முடைய விசுவாசம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில்தான் உரிமையும், உறவும் இருக்கிறது.

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் என்று லூக்கா 12:32ல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். எகிப்திலிருந்து வெளிப்பட்ட இஸ்ரவேலருக்கும் அவர் ராஜ்ஜியத்தைக் கொடுக்க பிரியமாகத்தான் இருந்தார். ஆனால் அவர்கள் தங்களையே மையமாக வைத்து சிந்தித்துக்கொண்டிருந்தபடியால் அதை அப்போது பெற்றுக்கொள்ள முடியாமல் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால் தேவனுடைய இருதயமானது எப்போதும் கொடுக்கவே ஆயத்தமாக இருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ளும்போதுதான் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்தம் நமக்கு உண்டாகிறது. நமக்குக் கொடுப்பதற்காக ஆசீர்வாதங்களையும், பொறுப்புகளையும் ஆயத்தப்படுத்திய தேவன், நாம் அதைப் பெற்றுக்கொள்வதற்காக நூனின் குமாரனாகிய யோசுவாவை தமது வார்த்தைகளைக் கொண்டு ஆயத்தப்படுத்தியது போல நம்மையும் ஆயத்தப்படுத்துகிறவராக இருக்கிறார்.

நமது மனதில் அவர் உருவாக்கும் ஆயத்தமானது நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. அந்த எதிர்பார்ப்பு ஒரு ஒழுக்கத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அந்த ஒழுக்கம்தான் சரியான திசையில் நம்மை நடத்திச்சென்று பெற்றுக்கொள்ளும் புள்ளியில் கொண்டுவந்து நம்மை நிறுத்துகிறது.

ஆகவே தரும்படி நமக்காக ஆயத்தம் பண்ணின தேவன், பெற்றுக்கொள்ளும்படி நம்மையும் ஆயத்தப்படுத்துகிறவராக இருக்கிறபடியால் நாம் அவரைப் பற்றிக்கொண்டு அவர் வார்த்தை காட்டும் வழியில் தைரியமாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிப்போமாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/BGw5TYV9P4U

>