பலன் அளிக்கிறவர்: உறவு…உரையாடல்

Home » பலன் அளிக்கிறவர்: உறவு…உரையாடல்

பலன் அளிக்கிறவர்: உறவு…உரையாடல்

தேவனோடு உறவு இருந்தால் கட்டாயம் உரையாடல் இருக்க வேண்டும். இரெண்டு நபர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை என்றால் அவர்களுக்குள் சரியான உறவு இல்லை என்று அர்த்தம். பேச்சு வார்த்தை இல்லாதிருந்தால் உறவு சரியாக இல்லை என்பது அர்த்தமானால், பேச்சு வார்த்தை சரியாக இருந்தால் உறவும் சரியாக இருக்கிறது என்பது பொருள்.

விசுவாசம் கேள்வியினால் வருகிறது. அவர் பேசுவதைக் கேட்கும் உறவு இருந்தால்தான் அங்கே விசுவாசம் வளரும் சாத்தியக்கூறே இருக்கிறது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது என்கிற விளக்கம் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வெறும் அறிவு மட்டும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது. விசுவாசத்தை உறவின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான் விசுவாசத்தை நம்மால் நடைமுறை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த முடியும்.

உறவின் நிமித்தமாக வருகிற உரையாடல்தான் ஜெபம். என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுவதாக எரேமியா 33:3ல் வாசிக்கிறோம்.

குட்டி சாமுவேல் சொன்னதுபோல, “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்” (1 சாமுவேல் 3:10) என்ற தாழ்மையின் மறுமொழியிலிருந்து கர்த்தரோடுள்ள இனிய உறவு ஆரம்பிக்கிறது. கர்த்தர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டு அதன்படி வாழ்க்கையை வாழ்வதினிமித்தம் ஆசீர்வாதங்கள் வெள்ளமென பெருக்கெடுத்து நம் வாழ்க்கைக்குள் வருகின்றன. இந்த உறவானது ஒருமுறை பேசுவதோடு நின்றுவிடாமல் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். சாமுவேல் தீர்க்கதரிசியோடு கர்த்தருக்கு இருந்த உறவு சிறுவயதில் ஒருமுறை பேசியதோடு நில்லாமல் அவன் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது, இதற்கு 1 சாமுவேல் 3:19-21 வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

தேவனுடைய மனதைப் புரிந்து அதை வெளிப்படுத்துவதுதான் தீர்க்கதரிசனம். கர்த்தராகிய தேவன் ஆபிரகாமை தீர்க்கதரிசி என்று சொல்வதை ஆதியாகமம் 20:7ல் வாசிக்கலாம். ஆம், வசனத்தைப் புரிந்துகொள்ளுவதுதான் தீர்க்கதரிசனம். வசனத்தைப் புரிந்தவர்கள் தங்கள் வார்த்தைகளில் அபார விசுவாசத்தை வெளிப்படுத்துவார்கள். ஏனெனில் அவர்களுக்கு அந்த வசனத்தைச் சொன்னவரோடு உறவு இருக்கிறது. அல்லேலூயா!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/q990JW9-JVs

>