பலன் அளிக்கிறவர்: சுதந்திரம்

Home » பலன் அளிக்கிறவர்: சுதந்திரம்

பலன் அளிக்கிறவர்: சுதந்திரம்

ஒருமுறை கர்த்தராகிய இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31,32) ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, அவருடைய உபதேசத்தில் நிலைத்திருந்தால் அவருடைய சீஷனாக இருப்பான். அப்படி சீஷனாக இருப்பவன் சத்தியத்தை அறிந்துகொள்வான், அவன் அறிந்த அந்த சத்தியம் அவனை விடுதலையாக்கும்.

பொந்தியு பிலாத்து தன்னிடம் விசாரணைக்கு நின்று கொண்டிருந்த இயேசுவிடம் கேட்கிறான், சத்தியமாவது என்ன? என்ன என்று அவன் கேட்டதைவிட யார் என்று கேட்டிருந்தால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் சத்தியம் ஆள்தத்துவமுள்ளது. அந்த சத்தியம் கர்த்தராகிய இயேசுதான். அவர்தான் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று சொன்னவர்.

சத்தியம் விடுதலையாக்கும் என்றால், இயேசு விடுதலையாக்குவார் என்று பொருள். அதனால்தான் “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்று யோவான் 8:36 சொல்லுகிறது. குமாரன் எப்படி நம்மை விடுதலையாக்க முடியும்? அவர் புத்திர சுவீகாரத்தின் ஆவியாக நமக்குள் தங்கியிருக்கிறார். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு என்று 2 கொரிந்தியர் 3:17) சொல்லுகிறது. வேதம் அவரை கிறிஸ்துவின் ஆவி என்று அழைக்கிறது. (ரோமர் 8:9)

சத்தியமாகிய கிறிஸ்து அளிக்கும் அந்த விடுதலை அல்லது சுதந்திரம் எப்படிப்பட்டதென்றால் அது தேவபிள்ளைகளுக்குரிய சுதந்திரம் ஆகும். அதாவது தேவனுடைய பிள்ளை எப்படி வாழவேண்டுமோ அப்படி நம்மை வாழச்செய்யும் சுதந்திரம் ஆகும். ஒருகாலத்தில் பாவத்துக்கு அடிமையாகிக் கிடந்த நமக்கு, அந்த பாவத்தை செய்யாமல் இருக்கும் சுதந்திரத்தை தேவன் நமக்கு அருளுகிறார். இந்த சுதந்திரத்தை வேறு யாரும் அல்லது வேறு எந்த சித்தாந்தமும் நமக்குத் தரமுடியாது.

ஆம், நம்மால் பாவம் செய்ய முடியும். ஆனால் செய்யாமலிருக்கவும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நம்மால் வெற்றியுள்ள ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழமுடியும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/bYtl_p8pNjg

>