பலன் அளிக்கிறவர்: பின்தொடர பெலன்

Home » பலன் அளிக்கிறவர்: பின்தொடர பெலன்

பலன் அளிக்கிறவர்: பின்தொடர பெலன்

எலியா நம்மைப்போல் பாடுள்ள மனிதனாக இருந்தும் ஜெபம் பண்ணினான் என்று யாக்கோபு 5:17 சொல்லுகிறது. அவன் இஸ்ரேல் தேசத்தில் மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று வேதம் சொல்லுகிறது. இதற்கு அடுத்த வசனத்தில் அவன் மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது என்று வாசிக்கிறோம். இதைப் புதிய ஏற்பாட்டில நாம் சாதாரணமாக வாசித்துவிட்டுக் கடந்து போனாலும். அந்த சம்பவம் நடைபெற்ற பழைய ஏற்பாட்டின் வேதபகுதியில் எலியா மறுபடியும் ஜெபிப்பதற்கு முன்பு அவன் ஜெபத்துக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாதிருந்தும் அவன் மறுபடியும் ஜெபித்தான் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமக்கும்கூட வாக்குத்தத்தங்கள் கிடைத்ததும் சூழ்நிலைகள் கிடைத்த வாக்குத்தத்ததுக்கு எதிராக மாறும்போது நமக்கு நமக்கு சந்தேகமும், சோர்வும் ஏற்பட்டு வாக்குத்தத்ததுக்கும் நமது வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாதது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் விண்ணப்பமானது அந்த வாக்குத்தத்ததுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. எனவே வாக்குத்தத்தத்துக்கு எதிராக சூழல்கள் மாறினாலும் மறுபடியும் விண்ணப்பம் செய்வது நமது பொறுப்பு.

எல்லாம் எதிர்மறையாக இருக்கும்போது, எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சூழ்நிலைகள் மாறும்போது ஜெபிப்பது சவாலாக மாறிவிடுகிறது. ஆனாலும் எலியா மறுபடியும் ஜெபித்தான். ஏனெனில் அப்பேற்பட்ட சோர்வுகளின் மத்தியிலும் ஜெபிப்பதற்கு தேவனே பெலன் தருகிறார். நாம் இந்த பூமியில் தனியாகப் போராடிக்கொண்டிருக்கவில்லை. நம்மோடு சேர்ந்து ஜெபிக்க தேவன் நமக்கு சபையாகிய குடும்பத்தைக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல நாம் இந்த பூமியில் நமக்காக ஜெபிப்பதுபோல பரலோகத்தில் நமக்காக பிதாவின் சமுகத்தில் வேண்டுதல் செய்யும் கர்த்தராகிய இயேசு நமக்கு இருக்கிறார். (ரோமர் 8:34)

அதுமட்டுமல்ல, பரமண்டலத்தில் ஒலிக்கும் இயேசுவின் குரல், பரிசுத்த ஆவியானவராக நமக்குள் இருந்து, பரமண்டலத்தில் நமக்காக சொல்லப்படும் தீர்வை நமக்குள் எதிரொலிக்கிறது. அந்தக் குரல் சொல்லும் வார்த்தைகள் நம் வாயின் அறிக்கையாக வெளிவரும்போது தீர்வை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வளவு பெரிய கட்டமைப்பு நமக்காக செயலாற்றும்போது நாம் சோர்ந்துபோகாமல், சந்தேகப்படாமல், உற்சாகம்கொண்டு எலியாவைப்போல மறுபடியும் ஜெபிக்கலாம். கர்த்தர் நம் சூழ்நிலைகளை நிச்சயம் மாற்றி, நம் காத்திருத்தலை முடிவுக்குக் கொண்டுவந்து, நமக்காக முன்குறித்ததை நமக்குக் கொடுப்பார்.

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். (நீதிமொழிகள் 13:12)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/KubD99-IjNI

>