பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்று சகரியா 4:7 சொல்லுகிறது. பெரிய பர்வதம் சமபூமியாகும், ஜனங்கள் கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள். அதாவது பெரிய பர்வதம் சமபூமியாக அறிக்கை மிக முக்கியம்.
அறிக்கை என்பது வாயின் அறிக்கையில் ஆரம்பித்து, கரங்களின் செயலில் முடிவு பெறுகிறது. செய்து நிறைவேற்றுவதற்கு முன்பாக செய்யப்போவதைச் சொல்லுவது என்பது தேவனுடைய பாணியாகும். கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் எசேக்கியேல் 36:36ல் சொல்லுகிறார். அவரைப்போல கிரியை செய்ய விரும்பும் நாமும் அவரையே பின்பற்ற வேண்டும்.
தேவன் செய்வார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் சொல்லியிருக்கிறார் எனவே செய்வார் என்பது நிச்சயம். அவர் சொல்லுவதன் மூலமாகத்தான் ஒரு செயலை நிறைவேற்றுகிறார். நம்முடைய வாழ்விலும் அவர் என்ன சொன்னாரோ அதை செய்து முடிப்பார் என்பது நிச்சயம்.
அவர் சொன்னதை நிறைவேற்றி முடிப்பார், ஆகவே நாம் வாளாவிருக்கலாம் என்று பொருள் கொள்ளலாமா? நிச்சயமாக இல்லை. அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யப்போவதாக வாக்குப் பண்ணினதை நம்மைக் கொண்டுதான் செய்யப் போகிறார். எனவே நமக்கும் அதில் ஒரு பங்கு இருக்கவே செய்கிறது. நம் பொறுப்பை நாம் புரிந்து கொள்ளாத பட்சத்தில் அவர் நம்மைப் பயன்படுத்துவது கடினம்.
ஒரு திருமண வீட்டில் மாப்பிள்ளைக்கு தான்தான் மாப்பிள்ளை என்பது தெரியாவிட்டால் அவன் மணவறையில் வந்து அமரமாட்டான், மாப்பிள்ளை செய்ய வேண்டிய சடங்குகளில் பங்கு கொள்ளமாட்டான். அப்படித்தான் நம்மைக்குறித்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதில் நமது பங்கை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதை நிறைவேற்றுவதில் நம்மால் தேவதிட்டத்தை செயல்படுத்த முடியும்.
பேழையை செய்வதை குறித்து நோவாவுக்கும், ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து மோசேக்கும், தேவாலயத்தைக் குறித்து சாலோமோனுக்கும் தேவன் அவைகளைக் கட்டி நிறைவேற்றும் விதத்தைக் குறித்து கற்றுக்கொடுத்தார். அவர்கள் கற்றுக்கொண்டதை செயல்படுத்தினார்கள், தேவதிட்டம் நிறைவேறியது. அப்படித்தான் நாமும் நம்மைக் குறித்த தேவதிட்டத்தை அறிந்துகொள்ள மரியாளைப்போல கர்த்தர் இயேசுவின் பாதப்படியில் அமர வேண்டும். எருசலேம் அலங்கத்தைக் கட்ட உனக்கு என்னவெல்லாம் தேவை என்று ராஜா கேட்டபோது சற்றும் தயங்காமல் தேவைகளை தெளிவாக சொல்லத் தெரிந்த நெகமியாவை இங்கு நினைவுகூருங்கள். நெகேமியா இந்தக் காரியங்களை எங்கு கற்றிருந்திருப்பார்? நிச்சயமாக கர்த்தருடைய சமுகத்தில்தான் இந்தக் காரியங்களை அவர் கற்றிருந்திருப்பார்.
தாவீதின் கரங்களை யுத்தத்துக்குப் பழக்குவித்த தேவன் நமது கரங்களையும் பழக்குவிப்பார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் செய்து முடிக்கப்போவதாக வாக்குப்பண்ணினதைக் குறித்து அவரிடத்தில் விண்ணப்பம் செய்வதும், அதற்கான வழிமுறைகளை அவர் பாதப்படியில் அமர்ந்து கற்றுக்கொள்வதுமே!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/yy480MIbuIo