இது எனக்கான தனிப்பட்ட வாக்குத்தத்தம் என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? வேதத்தில் எத்தனையோ வாக்குத்தத்தம் இருக்க, அவை அனைத்தும் நமக்குச் சொந்தமாயிருக்க, அவர்கள் எதனால் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்லுகிறார்கள்? அந்த வசனத்தை ஆவியானவர் அவரிடம் தனிப்பட்ட விதத்தில் பேசி உறுதிப் படுத்தியிருக்கிறார்.
வேதத்தில் 1 இராஜாக்கள் புத்தகம் 18 – ஆம் அதிகாரத்தில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிகழ்வு இருக்கிறது. எலியா கர்மேல் பர்வதத்தில் அக்கினி வரவைத்து கர்த்தரே தேவன் என்று இஸ்ரவேல் மக்களுக்குக் காட்டிய சம்பவம்தான் அது. அந்த சம்பவத்தின் ஆரம்பம் இப்படி அழகாகத் தொடங்குகிறது, “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி…”
ஆம், கர்த்தருடைய சத்தம் எப்போதும் தொனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட வார்த்தை அந்த சூழலில் எலியாவுக்கு மட்டும் உண்டாயிருந்தது அல்லவா? அப்படித்தான் சிலருக்கு வேதத்தில் இடம்பெற்றிருக்கும் சில வசனங்கள் அவர்களோடு தனிப்பட்ட விதத்தில் ஆவியானவர் இடைப்பட்டு உண்டான வார்த்தையாகக் காணப்பட்டு அந்த வசனம் அவர்கள் ஊனோடும், உயிரோடும் கலந்துவிடுகிறது.
ரோமர் 8:16 – ஆவியானவர் நம்முடைய ஆவியுடனேகூட சாட்சிகொடுக்கிறார் என்று சொல்லுகிறது. ஆவியானவர் தமது வார்த்தையைக் கொண்டு நம்மோடு இடைபடுவது நமது ஆவிக்கு அவ்வளவு அந்நியோனியமாக, நெருக்கமான விஷயமாக இருக்கிறது. மேலும் அவர் நமக்கு புரிந்துகொள்ளும் வழிகளில் மிக எளிமையாகப் பேசி நமக்கு உறுதிப்படுத்திவிடுகிறார். எனவேதான் அந்த வார்த்தை நமது எலும்புகளுக்குள் அடைபட்டு எரியும் அக்கினிபோல நம்மோடு இரண்டறக் கலந்துவிடுகிறது.
அவர் இப்படிப் பேசி, நாம் கேட்டால் நமக்கு விசுவாசம் வராமல் எப்படியிருக்கும்? கேட்டலினால்தானே விசுவாசம் வருகிறது. அதுமட்டுமல்ல, அவர் நாம் புரிந்துகொள்ளும்விதமாகப் பேசுவதால், அதைப் புரிந்துகொள்ளும்போது அந்த விசுவாசம் பெலப்படுகிறது. நாம் அதை அறிக்கைசெய்யும்போது அது உறுதிப்படுகிறது, அந்த விசுவாசத்தை நாம் கிரியையாக மாற்றும்பொழுது அது பூரணப்படுகிறது.
யோவான் 12:27,28 வசனங்களில் கர்த்தராகிய இயேசு பிதாவோடு பேச, பிதா அதற்கு வானத்திலிருந்து பதிலளிக்கிறார். அந்த பதில் இயேசுவுக்கு அப்பாவின் சத்தமாகக் கேட்டது, ஆனால் சுற்றியிருந்தவர்களுக்கோ அது இடிமுழக்கமாகக் கேட்டதாக அந்த வேதபகுதியில் வாசிக்கிறோம். அதேபோலத்தான் கர்த்தரால் உண்டான வார்த்தையை கேட்ட எலியாவுக்கு வரப்போகும் பெருமழையின் இரைச்சல் தொனி கேட்டது, மற்றவர்களுக்கோ அது கேட்கப்படவில்லை.
அந்த சூழலில் புறச்சூழலில் எந்த மாற்றமும் காணப்படாவிட்டாலும், எலியா தேவன் தனக்குச் சொன்ன வார்த்தையின் படி (1 இராஜாக்கள் 18:1) மிக பலத்த மழை ஒன்று தேசத்தில் பெய்யப்போவதை உணர்ந்தவராக அரசனாகிய ஆகாபை யெஸ்ரெயேலுக்குச் செல்லும்படி துரிதப்படுத்துகிறார். தனது வேலைக்காரனை ஏழுதரம் போய் சமுத்திரமுகமாகப் பார்க்கச் சொல்லுகிறார்.
தாழ விழுந்து கர்த்தரைப் பணிந்துகொள்ளுகிறார். இந்தப் பணிதலானது தாழ்மையின் அடையாளமாக இருக்கிறது. தாழ்மை என்பது நமது சார்ந்திருத்தலில் வெளிப்படுகிறது. எலியா தேவன் தனக்கு சொன்ன வார்த்தை நிறைவேற தேவனையே முற்றிலும் சார்ந்துகொண்டிருந்தார். இந்தச் சம்பவத்தின்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நாம் தாழ்மையுடனும், விசுவாசத்துடனும் கர்த்தரை மட்டும் சார்ந்து அவருக்காக காத்திருந்தால் நெடுங்காலமாகக் காத்திருந்தது நம்முடைய இருதயத்தை இளைக்கப்பண்ணினாலும் விரும்பினது ஜீவ விருட்சம்ப்போல நம் கைகளில் வந்து சேரும். கர்த்தர் சொன்னார், அதைக் கர்த்தரே முடிப்பார்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/jqnXvPwM8Kc