தரமாட்டேன் என்று சொல்பவரிடத்தில் கேட்பதற்கும், தருவேன் என்று சொல்பவரிடத்தில் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பூட்டு இருக்கிற வீட்டை ஒருவர் தட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டினுள் யாருமே இல்லை என்றால், இவர் என்னதான் கதவை பலமாகத் தட்டினாலும், எத்தனை முறை அழைப்பு மணியை அழுத்தினாலும் அதனால் பயனில்லை.
ஆனால் நமக்கோ தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்லுகிற தேவன் இருக்கிறார். அப்படியிருக்க அந்த கதவை எப்படி தட்ட வேண்டும், கேட்டவைகளை எப்படிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவு நமக்கு அவசியமாக இருக்கிறது. அதேநேரத்தில் அதற்கு இருக்கும் தடைகள் என்ன அவற்றை மேற்கொள்வது எப்படி என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் பிசாசானவனோ, அவர் தருகிறவர்தான், ஆனால் உனக்குத்தான் பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்று நம்மை மடை மாற்றுவான். பிசாசானவன் சொல்வது முற்றிலும் பொய். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்றும் லூக்கா 18:7 சொல்லுகிறது. நம்முடைய விஷயத்தில் கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து நமக்கு சீக்கிரத்தில் நியாயம் செய்வார் என்பதை நாம் ஆணித்தரமாக விசுவாசிக்க வேண்டும்.
வேதம் எதை முக்கியப்படுத்துகிறதோ நாம் அதை முதன்மைப்படுத்த வேண்டும். நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? நாம் எதைக் கேட்கவேண்டும் என்று அறியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அவைகளை எப்படிக் களைவது என்பதை வேதம் நமக்குத் தெளிவாகக் கற்றுத்தருகிறது.
நம்மிடத்தில் ஆவியானவரும், வார்த்தையும் கிரியை செய்யாதபோது நாம் வறண்ட நிலம் போல மாறிவிடுகிறோம். ஆவியானவரும், தேவ வார்த்தையும் இணைந்து செயலாற்றும்போது தான் நமக்குள் தெய்வீக மாற்றங்கள் உண்டாகின்றன. ஆவியானவருக்கு இடங்கொடாமல் இருக்கும்போது நாம் வெறுமனே அறிவு சார்ந்த அல்லது உணர்வு சார்ந்த வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு அதிலே பெருமை பாராட்டிக்கொண்டிருப்போம்.
இதைத்தான் மாம்சபிரகாரமான வாழ்க்கை என்று 1 கொரிந்தியர் 3:1-3 வசனங்களில் பவுல் சொல்லுகிறார். நாம் மாம்சபிரகாரமானவர்களாக இருக்கும்போது திட ஆகாரமாகிய வசனத்தை நம்மால் உட்கொள்ள முடியாது. மாம்சத்துக்குரியவர்கள் வைராக்கியமும், பொறாமையும், கசப்பும், கலகமும் உள்ள வாழ்க்கைக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இவைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே பேய்த்தனத்துக்கடுத்த சுபாவங்கள் தானாகவே வந்து வாழ்க்கையை சீரழித்துவிடும்.
ஏதோ ஒருமுறை இருமுறை அல்ல, நாம் எப்போதும் கேட்டதையெல்லாம் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக மாற்றப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதாவது நமது வாழ்க்கை முறையே மாற்றப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதற்கான வழிமுறைதான் என்ன? நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்று கர்த்தராகிய இயேசு யோவான் 15:7- இல் கூறுகிறார். விசுவாசத்தினாலே கிறிஸ்து நம் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நாம் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாக மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்படியான மாற்றம் நிலையானதாகவும், நிலைத்த கனிதரக் கூடியதாகவும் இருக்கிறது.
நாம் அப்படிப்பட்ட மாற்றத்துக்கு இடங்கொடுக்கும்போது, நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவர் நமது வாழ்வை செழிப்புள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றி நம்மை சாட்சியாக நிறுத்த வல்லவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/TEOMWbWKmWk